செவ்வாய், 23 மே, 2017

சொலவடையின் சொந்தக்காரர்

பழமொழிஎன்று பொதுவாக அறியப்படும் சொலவடைதாய்தாத்தன்பாட்டன்முப்பாட்டன் என பல தலைமுறைகளாக வழங்கிவரும் தொடர். உலக இயல்புகளையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு நயம்பட அமையும் இத்தொடர்கள் பொருள் பொதிந்தவைகளாக இருக்கின்றன. ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் சொலவடைகள் இருக்கின்றன. இந்தச் சொலவடைகளை யார் உருவாக்கினார்கள்என்ற வினாவிற்கு மூதாதையர் என்ற முதிய பதில் தான் நமக்குத் தெரியும். ஏனென்றால் கருத்துக்குக் காப்புரிமை பெறும் வசதியெல்லாம் நம் பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் வாய்க்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சொலவடையை உருவாக்கியவர் இவர் என்று யாரையேனும் அடையாளம் காட்ட முடியுமாஅது அவ்வளவு எளிதல்ல. ஆனால்அப்படியொரு விந்தையை இன்று ஒரு கிராமம் வாய்மொழி வரலாறாக வழங்கிக்கொண்டிருக்கிறது.

புணையல் அடிக்கிற மாடு வைக்கோல் திங்காமலா (திண்ணாமலா) இருக்கும்?” என்றொரு சொலவடை தமிழ்நாட்டில் இராஜபாளையம் அருகில் உள்ள நக்கனேரி கிராமத்தில் பிரபலம். பெரும்பாலான கருத்துக்களை சொலவடையோடு பொருத்தி முடிக்கும் நம்மரபில்இக்கிராம மக்கள்தொடர்புடைய கருத்தின் முடிவில் முத்தாய்ப்பாக, “வேதநாயகம் சொன்னமாதிரிபுணையல் அடிக்கிற மாடு வைக்கோல் திங்காமலா இருக்கும்?” என்று கூறுகிறார்கள். இந்த சொலவடைக்கு முன் மட்டும் அது யாருடையது என்ற குறிப்பும் வருகிறது. குறிப்போடு கூறும் இந்தப் பழக்கம் தற்போது ஐம்பது வயதுக்கு மேலுள்ள தலைமுறையிடம் மட்டுமே காண முடிகிறது. இளைய தலைமுறையிடம் அது வேதநாயகத்தை மறந்துஒரு முதுமொழியாக மட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. கருத்துக்குப் பொருத்தமான சொலவடையைப் பயன்படுத்தும் ரசனை மரபும் இளைய தலைமுறையிடம் குறைந்து கொண்டிருக்கிறது.

புணையல் என்பது பொதுவாக கரிசல் நிலத்தில் (கோவில்பட்டிதூத்துக்குடிஇராஜபாளையம் முதலிய வட்டாரங்கள்) வழங்கும் சொல். புணையல் என்பது இரண்டு மாடுகளை(ஜோடி மாடு) மேக்காலில் பூட்டி வட்டமடிக்கச் செய்யும் தொழில்நுட்பம். இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்ட இடம் தான் வேளாண்குடிகளின் அடையாளம். விளைந்த நெல்மணிகளை நெற்கதிரிலிருந்து பிரிக்க இத்தொழில்நுட்பத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். கடந்த நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்த இத்தொழில்நுட்பம் முதலில் டிராக்டராலும் பின்பு நெல் அறுக்கும் இயந்திரத்தாலும் மறக்கடிக்கப்பட்டது.

விளைந்த நெற்கதிர்களை வயலிலிருந்து அறுத்துக் கொண்டு வந்து களத்து மேட்டில் பரப்பிஅதன் மேல்மேக்காலில் பூட்டிய மாடுகளை வட்டமடிக்கச்செய்யும் போதுமாடுகளின் பாதங்களில் மிதிபடும் நெற்கதிரிலிருந்து நெல்லும் கதிரும்  தனித்தனியாகப் பிரியும். களத்துமேட்டில் பரப்பிக்கிடக்கும் நெற்கதிரின் மேல் மாடுகள் பூட்டி வட்டமடிக்கும் அந்த தொழில்நுட்பத்தின் பெயர் தான் ‘புணையல்’ என்கிறது கரிசல் வட்டாரம். அவ்வாறு புணையல் அடிக்கும் போதுமாடுகள் தன் கால்களில் மிதிபடும் கதிர்களை வாயால் தொடாமலா இருக்கும்?, வைக்கோலுக்கு உள்ளேயே புழங்கும் மாடு வைக்கோலில் வாய் வைக்காமலா இருக்கும்?. வாயில்லா (பேச்சில்லா) ஜீவன்கள் வாயருகே கிடைக்கும் உணவை உண்பது இயல்பு தானே. உணவை உற்பத்தி பண்ணும் விவசாயத்தொழிலில் நிகழும் ஒரு செயல் இது. இந்தக்காட்சியை மிக அழகாக மனித வாழ்வியல் பண்போடு உருவகப்படுத்துவதில் நிபுணத்துவம் உடையவர்கள் கிராமத்து மக்கள். இந்த உருவகம் சாதாரணமாக உருவாவதில்லை, கச்சிதமான கருத்துப் பொருத்தத்தோடும், மிகுந்த அழகுணர்ச்சியோடும் உருவாக்கப்படும். இந்த அழகுணர்ச்சி தான் பழமொழிக்கு இலக்கியநயம் கொடுக்கிறது. அந்த இலக்கிய நயமே வாய்மொழி இலக்கியங்களுக்கு, கம்பன், காளிதாசன் படைத்த இலக்கியங்களுக்கு நிகரான இலக்கிய அந்தஸ்தைக் கொடுக்கிறது.

புணையல் அடிக்கிற மாடு வைக்கோல் திண்ணும் என்பது இயற்கை. இந்த இயற்கையான செயலை ‘உயிர்’ என்ற அடிப்படையில், குறிப்பாக ‘பசியெடுக்கும் உயிர்’ என்ற அடிப்படையில் மாட்டுக்கும் மனிதனுக்கும் பொதுவாகிறது. பசியெடுத்தால் உணவைத் தேடுவது, அதுவும் வேலை செய்யும் போது பசியெடுத்தால் அருகில்-எளிதில் கிடைக்கும் உணவின்(வாய்ப்பு) மீது கவனம் திரும்புவது உயிர்களின் மிக இயல்பான குணம். இந்தப் பொதுப்பண்புகள் தான் மாடு-மனிதன் என்னும் இரு உயிர்களின் செயலை ஒன்றாகப் பொருத்துகின்றன. முதன்மையான இந்தப்பொருத்தங்களே ஒன்றிற்கொன்று உவமையாக, உருவகமாக அமைவதற்கு போதுமானவையாகும். ஒரு செயலின் எல்லாக்கூறுகளும் பொருந்தவேண்டியதில்லை. முதன்மையான கூறுகளுக்கிடையிலான பொருத்தம் தான் அடிப்படையானது.   

இந்த சொலவடையை உருவாக்கியவர் அல்லது முதன் முதலில் பயன்படுத்தியவர் என்று இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதநாயகம் என்றொரு பெரியவரை நினைவுகூர்கிறது அந்தக் கிராமம். அப்பெரியவர் இந்த சொலவடையைப் பயன்படுத்திய போது இளமைக்கும் முதுமைக்கும் இடையில் வாழ்ந்தார். அவர் இந்த சொலவடையை முதன்முதலில் பயன்படுத்திய சூழல் மிகவும் சுவராஸ்யமானது. 1980களில் ஊர் நாட்டாண்மையாக பொறுப்பு வகித்த வேதநாயகம் தன் பதவிக்காலம் முடிந்ததும்தன் பொறுப்புக்காலத்தின் வரவு-செலவு கணக்கை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கல் செய்வதற்காக ஊர்க்கூட்டத்தைக் கூட்டினார். ஊர் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கூடியிருந்தனர்.ஊர் கணக்குப்பிள்ளை வரவு-செலவு கணக்கை வாசித்தார். வீட்டு வரிகோயில் வரிகண்மாய் வரி என்று வரவுகளும்ஊர்க்காவல் செலவுபொங்கல் செலவுகொட்டு(மேளச்) செலவு என செலவுகளும் வாசிக்கப்பட்டன. கொட்டுச்செலவை வாசித்த போது சிலர் இடைமறித்தனர். “கொட்டுச்செலவு எவ்வளவு என்று மறுபடியும் விவரமா வாசிப்பா” என்று ஓங்கி எழுந்தது ஒரு எதிர்க்குரல். கொட்டுக்காரருக்கான கூலிஅவர்களை அழைத்து வந்த பயணச்செலவுவெத்திலை பாக்குச் செலவு என்று கொட்டுச் செலவுக்கணக்கு விரிந்து கொண்டிருக்கையில், “பயணச்செலவு எவ்வளவு?” என்று மீண்டும் ஒரு இளவட்டக்குரல் இடைமறித்தது. “அறுபத்திரெண்டு ரூபாய்ப்பா” என்றார் கணக்குப்பிள்ளை. அறுபத்தி ரெண்டா...?! என்று பெருத்த சந்தேகத்தில் மூழ்கியது கூட்டம். உடனே தைரியமாக விளக்கமளிக்கத் தொடங்கினார் நாட்டாண்மை வேதநாயகம். “ஏப்பா... கொட்டுக்காரங்க அஞ்சு பேரு. அவங்களைக் கூப்பிடப் போனவங்க ரெண்டு பேருநானும் கணக்காப்பிள்ளையும். நாற்பது மைல் போயி அவங்களைக் கூப்பிட்டு வரும் போதுஇடையில்பசியெடுக்காதாபசியெடுத்தபோது,  காபித்தண்ணிடீத்தண்ணிசாப்பாடுன்னு அவங்களுக்கு வாங்கிக் கொடுத்தோம். அவங்க சாப்பிடும் போது நாங்க சாப்பிடாம இருக்க முடியுமாஎங்களுக்கும் பசிக்காதாநாங்களும் மனுஷன் தானே...” என்று நியாயம் பேசிய வேதநாயகம், “அதனால் தான் நாங்களும் கொஞ்சம் கொஞ்சம்...” என்று சுருதி குறைத்து, ‘புணையல் அடிக்கிற மாடு வைக்கோல் திங்காமலா இருக்கும்?’ என்ற கேள்வியோடு நிறுத்தினார். திகைத்து நின்ற கூட்டத்திற்கு ஞானோதயமானது. கூட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து சிரிப்பொலியும் மறுபுறத்திலிருந்து கூக்குரலும் எழுந்தன. அதற்கு, “நாட்டாண்மைனா அப்படியிப்படித் தான்யா இருக்கும்” என்று உரத்த குரலில் (அ)நியாயம் கற்பித்துக்கொண்டே கூட்டத்திலிருந்து கலைந்தார் வேதநாயகத்தின் உறவுக்காரர் ஒருவர். வேதநாயகத்தின் சொலவடை ஊர் நாட்டாண்மைகளுக்கு மட்டுமல்லஇன்று நாட்டை ஆள்பவர்களுக்கும் எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது.

இக்கட்டுரை 'புதிய தலைமுறை' வார இதழில் (1 ஜனவரி 2015) வெளியானது. 

 

கருத்துகள் இல்லை: