சனி, 10 ஜூன், 2017

பிம்பத்தில் ஒளிரும் மாயை (மதிப்புரை)


பிம்பச்சிறை
எம்.ஜி.ராமச்சந்திரன்திரையிலும் அரசியலிலும்
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (1992)
தமிழில்: பூ.கொ. சரவணன் (2016)
வெளியீடு:
பிரக்ஞை,
10/2 (8/2), போலீஸ் க்வாட்டர்ஸ் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600017
பக்கம்: 248,              விலை: 225

1992-இல் வெளியான The Image Trap: M G Ramachandran in Film and Politics என்னும் நூல் சமூகவியல் ஆய்வின் புதிய களங்களை அறிமுகம் செய்து ஆங்கில அறிவுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தின் அரசியல் அடையாளங்களில் பிரபலமான எம்.ஜி.ஆர். என்னும் மருதூர் கோபாலமேன ராமச்சந்திரன்புகழ்பெற்ற தன் பிம்பத்தை திரைப்படங்கள், அரசியல் மேடை, சுயவரலாறு போன்றவற்றின் மூலம்விளிம்புநிலை/அடித்தட்டு மக்களின் பொதுப்புத்தியில் (common sense) எப்படிக் கட்டமைத்தார் என்பதை, மார்க்சிய அறிஞரான கிராம்சியின் பொதுப்புத்திக் கோட்பாட்டின் வழி ஆராயும் இந்நூல், இப்போது (ஜூன்,2016) தமிழில், பிம்பச்சிறை: எம்.ஜி.ராமச்சந்திரன்திரையிலும் அரசியலிலும் என்று வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். தொடங்கிய, அவரை அடையாளமாகக் கொண்ட அ...தி.மு.. வரலாற்றில் எம்.ஜி.ஆருக்குப் பின், ஜெயலலிதாவின் மூலம் அக்கட்சி தொடர்ந்து இரண்டாம் முறையும் ஆட்சியைத் தக்க வைத்திருக்கும் சூழலில், வெளிவந்திருக்கும் இந்நூலின் ஆய்வுப்பொருள்களில் சில எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பொதுவானவையாக (ஒரே கட்சி என்பதையும் தாண்டி) இருப்பதை இந்நூலை வாசிக்கும் ஒருவரால் இனம் காண முடியும். இதுபோன்ற சில கூறுகள்[1] இந்நூலுக்கு சமகால முக்கியத்துவத்தை அளிக்கின்றன.
ஒருவரின் மரணத்திற்குக் கூடும் கூட்டம் அவருடைய செல்வாக்கின் அடையாளமாகத் திகழும் நம் மரபில் பாரதி, காமராஜர், என்.எஸ்.கிருஷ்ணன், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். என பல ஆளுமைகளின் இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டம் வியப்பிற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகின. முப்பத்தியொரு குறு அத்தியாயங்களில் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கதையைப் பேசும் இந்நூலையும் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்திலிருந்து தொடங்குகிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். தமிழ் மக்களிடம் எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கை அவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) நிகழ்ந்த நான்கு துன்பியல் நிகழ்வுகள் வழி குறிப்பிடுகிறார். எம்.ஜி.ஆரின் மரணம் (டிசம்பர் 24,1897), எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு காயமடைதல் (ஜனவரி 12, 1967), திராவிட முன்னேற்றக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுதல் (அக்டோபர் 10,1972), பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுதல் (அக்டோபர்,1984). இந்த நான்கு நிகழ்வுகளுக்கும் எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் வெளிப்படுத்திய எதிர்வினைகள் (தற்கொலை,தீக்குளிப்பு,உடல் உறுப்பை காணிக்கை செலுத்துதல், பெருந்திரளான ஊர்வலம், கலவரம்) எம்.ஜி.ஆர்.என்னும் வியத்தகு ஆளுமையை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. 1980-களில் மாத ஊதியமாக 400 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்துக் கொண்டிருந்த வறியவர்களே இந்த எதிர்வினைகளில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆரின் ரசிகர் கூட்டமும் எழுபத்து மூன்று சதவிகிதம் இந்த ஏழைகளாலே நிறைந்திருந்தது.
நிஜவாழ்வில் (அரசியல்-சினிமா வாழ்வின் அரிதாரமற்ற நிஜ முகம்) தமிழ் மேட்டுக்குடியினரின் (Tamil Elite) அங்கமாக விளங்கிய எம்.ஜி.ஆருக்காக, வர்க்கமுறையில் அவருக்கு நேரெதிரான ஏழ்மை நிலையில், தமிழகத்தின் குக்கிராமங்களில் பெருவாரியாக இருந்த விளிம்புநிலை மக்கள், தங்கள் வறுமையை மறந்து தற்கொலை, தீக்குளிப்பு, உடலுறுப்பு தானம் போன்ற தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் தியாகங்களில் ஈடுபடத்தூண்டியது எது? இந்த அகத்தூண்டுதலை அவர்களுக்கு ஊட்டியதில் நிஜ எம்.ஜி.ஆரின் பங்கு என்ன?அவர் எதன் மூலம் இந்த ஏழைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்?.ஜனநாயக முறையில் பெரும்பான்மைக்கு இருக்கும் முக்கியத்துவத்தால், பெரும்பான்மையினராக இருந்த இந்த ஏழை ரசிகர்களை,எம்.ஜி.ஆர்.தன் அரசியல் ஆதாயத்திற்கு எப்படிப் பயன்படுத்தினார்?, தன் ஆட்சியின் தோல்வியை மறைத்து, அதற்கெதிரான வெற்றி வாக்குமூலத்தை இந்தப் பெரும்பான்மையினரிடமிருந்து எவ்வாறு பெற்றார்? என பல்வேறு கோணங்களில் துல்லியமான ஆதாரங்களோடு அலசுகிறது இந்நூல்.
1917-இல் இலங்கையின் கண்டியில் பிறந்தார் எம்.ஜி.ஆர்.வறுமையின் காரணமாக அவரின் குடும்பம் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தது. எம்.கந்தசாமி பிள்ளை நடத்திய மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நாடக நடிகராக சிறுவயதிலிருந்தே நடித்துவந்தவர் பெரும் போராட்டத்திற்குப் பின், 1936-இல் சதி லீலாவதியில் திரைப்பட நடிகராக முன்னேறினார். திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரியில் நாயகனாக அறிமுகமானார். சுதந்திர போரட்டக் காலத்திலிருந்தே திரைப்பட ஊடகத்திற்கும், அரசியலுக்கும் இணக்கமாகத் தொடர்ந்த உறவாலும், திரைப்படத்திற்கு தி.மு.. அளித்துவந்த ஊக்கத்தாலும் சில திரைப்படங்கள் (மந்திரிகுமாரி,1950; பராசக்தி,1952; நாடோடிமன்னன்,1958) நேரடி அரசியல் பரப்புரை செய்யும் ஊடகமாக உருவெடுத்தன. எம்.ஜி.ஆர்.நட்சத்திர அரசியல்வாதியாக தி.மு..வால் வளர்க்கப்பட்டது இந்தக்காலகட்டத்தில் தான். திரையில் அவரது பிம்பம் ஏழைகளின் பங்காளனாகவும், வறியவர்களின் வாரிசாகவும் தீவிரமான அரசியல் கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டது. தி.மு..வின் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பிம்பம், 1972-க்குப் பின் தி.மு..விலிருந்து பிரிந்து, அதற்கு எதிராக உருவான .தி.மு..வின் அசுர வளர்ச்சிக்கும், 1977-ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கும் வழிவகுத்தது.
1977 முதல் 1987 வரையான பதினொரு ஆண்டுகள் எம்.ஜி.ஆர்.தமிழகத்தை ஆண்டார். அவர் ஆட்சிக்காலத்தில் வரிக்கொள்கைகளும், திட்டங்களும் வசதி படைத்தவர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு பாதகமாகவும் அமைந்திருந்ததை புள்ளிவிபரங்களுடன் நிறுவுகிறார் ஆசிரியர். விற்பனை வரி, கலால் வரி போன்ற நடுத்தரமக்களைப் பாதிக்கும் வரிகள் மூலமே அரசுக்குப் பெரும் வருவாய் ஈட்டப்பட்டது. நில வரி, வேளாண் வருமான வரி, நகர்ப்புற நில வரி போன்ற செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி விகிதம் மிகவும் குறைக்கப்பட்டது. 1960-65 காலகட்டத்தில் 15.5 சதவிகிதமாக இருந்த இந்த நேரடி வரி (நிலவரி, வேளாண் வருமானவரி, நகர்ப்புற நிலவரி) எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1.9 சதவிகிதமாக வீழ்ந்தது.1979-80-இல் விவசாயத்தொழிலாளர்கள் பெற்ற (விலைவாசி ஏற்றத்தை கணக்கில் கொண்ட) உண்மையான தினக்கூலியானது, 1951-52-இல் பெற்ற தினக்கூலியை விடக் குறைவாகவே இருந்தது.1961-71 காலகட்டத்தில் முறைப்படுத்தப்பட்ட துறையின் வேலை வாய்ப்பு அளவு 2.7 சதவிகிதமாக இருந்தது, 1971-81-களில் 2.1 சதவிகிதமாகக் குறைந்தது. ஊழல், நிர்வாகக் குறைபாடுகள், காவல்துறை அடக்குமுறை, தனக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை ஒடுக்குதல் என சர்வாதிகாரப்போக்கு நிறைந்ததாக எம்.ஜி.ஆர்.ஆட்சி இருந்தது. 1977 முதல் 1981 வரையான காலகட்டத்தில் பத்து நாட்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் லாக்கப் மரணம் அரங்கேற்றப்பட்டது. அரசை விமர்சிக்கும் திரைப்படங்களும், பத்திரிகைகளும் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகின. ஏழைகளின் பிரச்சினைகளைப் பேசும் ஊடகங்களும் ஒடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆரின் நிஜ முகம் இப்படி இருக்கும் போது, சமூகவியல் கோட்பாட்டின் படி, பாதிக்கப்பட்ட ஏழைகளும், நடுத்தர மக்களும், ஊடகங்களும் அவரது கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகத்தான் திரண்டிருக்க வேண்டும்.ஆனால் அப்படி நடக்கவில்லை.அதற்கு மாறாக, அனைவரும் அவருக்கு ஆதரவாகவே திரண்டனர். கோட்பாட்டிற்கு முரணான இந்த மாற்றத்தை, எம்.ஜி.ஆர். தன் திரைப்பிம்பம் மூலம் எப்படி சாத்தியமாக்கினார்? என்பதை இத்தாலிய மார்க்சிய அறிஞர் கிராம்ஸியின் பின்வரும் பொதுப்புத்தி வரையறையின் மூலம் விவரிக்கிறார்.
நெகிழ்வுத்தன்மைக்கு இடம்தரும் முரண்பட்ட இரு பண்புகளான, பழமையை முழுமையாகப் பேணாது விடல், ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடியின் தத்துவக்கூறுகளையும், முற்போக்கான, சுயாட்சித் தன்மை மிகுந்த கூறுகளையும் ஒருங்கே கொண்டிருப்பதே (விளிம்புநிலை மக்களின்) பொதுப்புத்தி
எம்.ஜி.ஆர். ரசிகர்களில் பெரும்பான்மையினராக (எழுபத்து மூன்று சதவீதம்) இருந்த விளிம்புநிலை மக்களின் பொதுப்புத்தியில் உள்ள மேல்தட்டின் அதிகாரக் குறியீடுகளையும், முற்போக்கான, சுயாட்சித்தன்மை மிகுந்த கூறுகளையும் எம்.ஜி.ஆர் தன் திரைப்பிம்பத்தில் (விளிம்புநிலை நாயகனாக இருந்து) எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை பின்வருமாறு நுட்பமாக விளக்குகிறார்.
·     ஒருபுறம், நிஜ வாழ்வில் மேல்தட்டு மக்களிடம் காணப்படும் ஏகபோக உரிமைகளான, நீதி வழங்கும் உரிமை, வன்முறையைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கைக்கொள்பவராகவும், மற்றொருபுறம் ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் ஒருங்கே தன் பிம்பத்தைக் கட்டமைத்தார் எம்.ஜி.ஆர். நிஜவாழ்க்கையில் காணமுடியாத இவற்றை திரைப்படப்பண்பு தரும் உரிமையின் முலம் திரையில் நிகழ்த்தினார். அவர் பயன்படுத்தும் மேல்தட்டின் (மேட்டுக்குடி) குறியீடுகளில் இது முதன்மையானதாக இருக்கின்றது.
· மேல் தட்டின் குறியீடுகளில் இரண்டாவது இடம் வகிப்பது கல்வி/எழுத்தறிவுபிராமணர்களின், பணக்காரர்களின் தனிச்சொத்தாக இருந்த கல்வியறிவை பாமரர்களுக்கும் உரியதாகக் காட்டினார் (தாழம்பூ,1965; தொழிலாளி,1964; குமரிக்கோட்டம்,1971; நான் ஏன் பிறந்தேன்,1972).மேல்தட்டுவர்க்கம் ஒடுக்குமுறைக்கு பயன்படுத்திய கல்வியை எம்.ஜி.ஆர். போராட்டத்திற்கு பயன்படுத்தினார் (படகோட்டி,1964; எங்க வீட்டு பிள்ளை,1965; மாட்டுக்கார வேலன்,1970).
· எம்.ஜி.ஆரின் மூன்றாவது அதிகாரக் குறியீடு பெண்களோடு தொடர்புடையது. பெண்களுக்குக் காதலிக்கும் உரிமையை அளிப்பவராகவும், சாதி/வர்க்க வேறுபாடுகளையும், குடும்ப எதிர்ப்புகளையும் கடந்து தான் விரும்பியவரை திருமணம் செய்ய அனுமதிப்பவராகவும் எம்.ஜி.ஆர் இருந்தார் (ராஜகுமாரி,1947; பெரிய இடத்துப் பெண்,1963; ஆயிரத்தில் ஒருவன்,1965;தாய்க்குத் தலைமகன்,1967). சமூக நடைமுறைகளை மீறும் இந்தப்போக்கு பெண்களுக்குப் புனைவான விடுதலையைத் தந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகைகளாக மாற்றியது.
· ஆடை, மொழி, உடல்மொழி முதலியவற்றில் அதிகார அடையாளங்களைப் பயன்படுத்தினார். திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் ஏழைகள் பணக்காரர்கள் முன்பு, கட்டிய கரங்களோடு சரணடையும் பொழுது, ஏழையாக வரும் எம்.ஜி.ஆர். மட்டும் தனக்கென்ற ஒரு பாணியில் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு, நிமிர்ந்த முதுகுடன் பணக்காரர்களை எதிர்கொள்கிறார். பணக்காரகளின் முன்பு தோளில் போடும் துண்டை, அதிகாரத்திற்கு அடங்கிப்போவதன் அடையாளமாக இடுப்பில் கட்டாமல், தலைப்பாகையாகக் கட்டுகிறார், அல்லது அப்படியே தோளிலே இருக்கச்செய்கிறார்(பெரிய இடத்துப் பெண்,1963; ஒளிவிளக்கு,1968; ரிக்ஷாக்காரன்,1971).  
· சமூக அடக்குமுறை பற்றிய அப்பட்டமான விவரிப்பு, விமர்சனம், எதிர்ப்பு முதலியவற்றை தன் திரைப்படப் பாடல்களில் தொடர்ந்து இடம்பெறச் செய்தார். எம்.ஜி.ஆர். திரப்படத்திற்கு பாடல் எழுதிய வாலி, புலமைப்பித்தன் ஆகியயோரின் பாடல்கள் எம்.ஜி.ஆர். பாடல்கள் என்றே அறியப்படுமளவிற்கு எம்.ஜி.ஆரின் தன்மயப்படுத்துதல் இருந்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்பகாலப்படமான மலைக்கள்ளன் படத்தில் வரும்எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேஎன்னும் பாடலை ஒத்த சமூக விமர்சனப்பாடல்களை தன் படங்களில்    தொடர்ந்து இடம்பெறச்செய்தார். எம்.ஜி.ஆர். கொள்கைப் பாடல்கள் என்று மலிவுவிலையில்விற்கப்பட்ட இவை, எம்.ஜி.ஆர். தானே முன்னெடுத்த சமூக விழிப்புணர்வு பிரச்சாரமாக மக்கள் மனங்களில் பதிந்தது.
இவ்வாறு எம்.ஜி.ஆரின் திரைப்பிம்பங்கள் விளிம்புநிலை மக்களை தன்வயப்படுத்தியது.விளிம்புநிலை மக்களோடு ரத்தத்தின் ரத்தமாகக் கலந்த இப்பிம்பங்கள் (எம்.ஜி.ஆரின் திரைப்பிம்பங்கள்), கிராமப்புறங்களில் விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வில் வழங்கிவந்த வீரகாவிய கதைப்பாடல்களோடும், கலாச்சார நம்பிக்கைகளோடும் ஒத்திருப்பதை இனம்காட்டி, அவை இரண்டிற்கும் உள்ள சமூக உறவை அற்புதமாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
நாட்டுப்புறங்களில் வழங்கிவரும் சின்னநாடான், சின்னத்தம்பி, ஜம்புலிங்கம், முத்துபட்டன், காத்தவராயன் முதலிய வீரகாவிய கதைப்பாடல்களில் வரும் நாயகர்கள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாகவும், பெண்களின் உரிமைகளைக் காக்கிறவர்களாகவும், சாதிக் கட்டுப்பாடுகளுக்கு சவால் விடுபவர்களாகவும், ஆதிக்க சாதிக்குழுக்களுக்கு மட்டும் இருக்கும் சிறப்புச்சலுகைகளை கேள்விக்கு உட்படுத்தி அனைவருக்கும் சம உரிமை கோருபவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த நாயகர்களுக்கும், எம்.ஜி.ஆரின் திரைப்பிம்பங்களுக்கும் குறிப்பிடத்தகுந்த பொருத்தங்கள் இருப்பதை இனம் கண்டு, எம்.ஜி.ஆரின் பிம்பத்திற்கும், விளிம்புநிலை மக்களுக்களின் பொதுப்புத்திக்கும் உள்ள நெருக்கமான உறவுக்கு வரலாற்றுத் தொடர்பை ஏற்படுத்துகிறார்.
திராவிட மொழிகளின் நாட்டுப்புற பாடல்களிலும், பண்பாட்டிலும் அன்னைக்கு இருக்கும் உயர்ந்த இடத்தை, அம்மா பாத்திரத்திற்கு எம்.ஜி.ஆர். என்னும் கடமையுணர்ச்சி மிகுந்த நாயகன் தரும் முக்கியத்துவத்தோடு பொருத்திப்பார்க்கும் முறை எம்.ஜி.ஆரின் பிம்பக்கட்டமைப்பில் உள்ள அரசியலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. பாத்திரத்தில் மட்டுமன்றி, படத்தின் பெயரிலும் (தாய்க்குப் பின் தாரம்,1956; தாய் சொல்லைத்தட்டாதே,1961; தாயைக்காத்த தனையன், 1962; தாயின் மடியில்,1964; தெய்வத்தாய்,1964), பாடலிலும் அன்னையின் மகத்துவம் போற்றினார். அதுவே அவரை பெண்களின் பேரன்புக்கு உரியவராக மாற்றியது. நாட்டுப்புற கதைப்பாடல்கள் தொட்டு மரபுவழியாகத் தொடரும் தமிழர்களின் தாய்ப்பாசத்தை, எம்.ஜி.ஆருக்குப் பின் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தன் பிம்பக்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தினார். தமிழர்களின் தாய்பாசத்தை சுய பிம்பக்கட்டமைப்பிற்குப் பயன்படுத்தும் போக்குஅம்மாஎனும் பாத்திரத்தில் மட்டுமில்லை. தமிழர்களின் தாய்பாசம் சினிமா, அரசியல் ஆகிய இரண்டின் மூலம் வெவ்வேறு காலகட்டங்களில் கிளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த உள்ளக் கிளர்ச்சியின் பயனை மகன் எனும் ஆண் பிம்பமும், தாய் எனும் பெண் பிம்பமும் தனித்தனியே அறுவடை செய்திருக்கின்றன.
இவ்வாறு விளிம்புநிலை மக்களின் மரபார்ந்த பண்பாட்டு உணர்வோடும், பொதுப்புத்தியோடும் பிண்ணிப்பிணைந்து, அவர்கள் எவ்வித மறுப்பும், எதிர்ப்பும் காட்டாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் எம்.ஜி.ஆரின் பிம்பம் கட்டமைக்கப்பட்டதை முதல் இருபது அத்தியாயங்களில் ஆழமாக விவரிக்கிறார்.
எம்.ஜி.ஆரின் பிம்பத்தை விளிம்புநிலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் திரைப்படத்திற்கு நிகரான ஊடகம் வேறெதுவுமில்லை. ஆனாலும் அவரது பிம்பக்கட்டமைப்பு திரைப்படத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை.விளிம்புநிலை மக்களிடம் தன் திரைப்பிம்பத்தை நிஜமென நிறுவ அவர் கையாண்ட முறைகளும் அப்பிம்பத்தின் வெற்றிக்கு உதவின. என்னென்ன வழிகளைப் பயன்படுத்தி தன் பிம்பத்திற்கும், நிஜத்திற்கு இருந்த முரண்பாட்டை, இடைவெளியை ஒழித்தார் என்பதை அடுத்த பதினொரு அத்தியாயங்களில் ஆராய்கிறார் பாண்டியன்.
அரசியல் மேடை, செய்தித்தாள், துண்டுச்சீட்டு, கட்சிச்சுவரொட்டி, காலண்டர், (பிறர் நடித்த) திரைப்படக்காட்சிகள் போன்றவற்றில் தன் பிம்பத்தையே எம்.ஜி.ஆர். முன்னிறுத்தினார். மேற்கண்ட ஊடகங்களில் தன்னை விளிம்புநிலை மக்களுக்கு நெருக்கமானவராகக் காட்ட, வறுமை நிறைந்த தன் ஆரம்பகால (திரைத்துறைக்கு வருவதற்கு முன்) வாழ்க்கையை மீண்டும் மீண்டும் முன்வைத்தார். அதோடு அவரது கொடைத்திறன், செயல்திறன் முதலியன மிகைப்படுத்தி பேசப்பட்டு, எம்.ஜி.ஆர்.பற்றி புனையப்பட்ட வரலாறுகள் நிறைய புழக்கத்தில் விடப்பட்டன. இவை அனைத்தும் அவரது திரைப்பிம்பத்தை ஒத்திருந்ததோடு, அவர் மீது ஒளி பாய்ச்சவும் செய்தன.
எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் தொடர்கள் மூலம் அவரால் பயனடைந்த தமிழ் மேட்டுக்குடியும், இதழ்களும் இன்றளவும் அவர் கட்டமைத்த பிம்பத்தை பொதுவெளியில் பரப்பிக்கொண்டிருக்கின்றன.[2] எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்பும் அவரது ஏழை ரசிகர்களிடமும், புதிய தலைமுறையினரிடமும் அப்பிம்பம் இவ்விதழ்களால் மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் ஜெயலலிதா போன்ற எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுகளுக்கு, பெருவாரியான அடித்தள மக்களின் ஆதரவை தொடர்ந்து கிடைக்கச்செய்து, மேட்டுக்குடியினர் அடைந்து வந்த அரசியல் ஆதாயம்[3] தக்கவைக்கப்படுகிறது.
தியாகி, முப்பிறவி, இறப்பில்லாதவர் என பலவாறு அவர் புனிதப்படுத்தப்பட்டார்.தமிழ் மரபில் உள்ள ஒருவனுக்கு ஒருத்திஎனும் கருத்தை, தன் திரப்படங்களின் பொதுவான குணமாக வறையறுத்து, தமிழர்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற எம்.ஜி.ஆர்., தன் நிஜவாழ்க்கையில் அதற்கு எதிராக இருந்தார். மூன்று பெண்களை திருமணம் செய்தவர், ஒரே காலகட்டத்தில் இரு மனைவிகளோடு (சதானந்தவதி-ஜானகி) வாழ்ந்தவர், குடும்பத்தைக் கலைத்தவர் (ஜானகியின் கணவர் உயிருடன் இருக்கும் போதே கவர்ந்துகொள்ளுதல்) போன்ற உண்மைகளையெல்லாம் ஊடகங்கள் மறைத்தன. அச்சு ஊடகங்களில் வெளியான அவரது வாழ்க்கை வரலாறுகள் இந்த விஷயத்தில்  கள்ளமௌனம் காட்டியதோடு மட்டுமன்றி, அவரை மூன்று பெண்களுக்கு வாழ்க்கைப் பிச்சை போட்ட தியாகியாகக் காட்டின. அச்சு ஊடகங்களிலும், அரசியல் மேடையிலும்  அரங்கேற்றப்பட்ட இவ்வகை அறப்பிறழ்வையும், பொய் பரப்புரைகளையும் பாண்டியன் தக்க ஆதாரங்களோடு தோலுறித்துக் காட்டுகிறார்.
திட்டமிடலோடு கட்டமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். பிம்பத்தின் தாக்கம் எல்லையற்றது. எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம், எம்.ஜி.ஆர். நல்ல மனிதர் என்ற தங்களின் வாதத்தை நிறுவுங்கள் என்று கேட்ட போது, பலர் அவரது திரைப்படங்களிலிருந்தே  உதாரணம் காட்டுவதை பாண்டியன் சுட்டிக்காட்டுகிறார். இந்த விளிம்புநிலைமக்களின் பொதுப்புத்தியில் பதிந்துபோன எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உடைக்க, கடும் சிரத்தை எடுத்த கருணாநிதியின் தி.மு..வுக்கு இறுதியில் தோல்வியே மிஞ்சியது.
இவ்வாறு தமிழ் சமூகத்தில் எம்.ஜி.ஆரின் தாக்கம் அளவிட முடியாததாக பரந்துகிடப்பதை, எம்.ஜி.ஆரின் (பிம்பம்) தாக்கம் தீவிரமான தேடலுக்கு உரிய ஒன்றாக இருக்கிறது (.xxi) என்கிறார் பாண்டியன். அந்தத் தேடலில் நான் கண்ட இரு விஷயங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளில் அவரைப்பற்றி சிலாகித்துப் பேசியவர்கள், எம்.ஜி.ஆர். வாழ்க! என தன்னெழுச்சியாகக் கோசமிட்டவர்கள், உள்ளூர் மேடைகளில் எம்.ஜி.ஆர். உருவத்தில் தோன்றி பலத்த கரவோசம் பெற்றவர்கள் என பல எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் கிராமப்புறங்களில் எம்.ஜி.ஆர்.என்றே அழைக்கப்பட்டார்கள். அப்பட்டப்பெயரை அவர்கள் மனமுவந்தும், மகிழ்ச்சியோடும் ஏற்றார்கள். இப்போதும் எம்.ஜி.ஆர்.என்னும் பட்டப்பெயருடையோர் நம்மிடையை பலர் உண்டு. இவர்களில் பெரும்பான்மையினர், 1928-இல் உருவாக்கப்பட்ட சென்னை மியூசிக் அகாதமியின் மேட்டுக்குடியினரால் அப்போது கூத்தாடிகள்என்று வர்ணிக்கப்பட்ட நாடக நடிக்கும் கூட்டத்தைச் சார்ந்த அடித்தட்டு மக்கள்.
எம்.ஜி.ஆர். கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களின் மேடையின் முன் தம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டச்சொல்லி கூடிய கூட்டத்தைப் போன்று, அவரது திரைப்படங்களின் ஈர்ப்பில், தங்கள் வீட்டில் பிறந்த பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எம்.ஜி.ஆரின் பெயரையும், அவருக்கு நாயகியாக நடித்தவரின் பெயரையும், திரைப்படத்தில் அவர்கள் ஏற்றிருந்த கதாப்பாத்திரத்தின் பெயரையும் சூட்டி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஊரிலும் எம்.ஜி.ஆர். பித்தர்கள் என்று பலர் இருந்திருக்கிறார்கள். எங்கள் ஊரில், எழுபது ஐந்து வயதுடைய, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஒருவர் சொன்ன உண்மைக்கதை: “எம்.ஜி.ஆர் பற்றிய கதை என்றால் தூக்கத்திலும் உற்சாகமாகப் பேசுவேன், இன்றும் எம்.ஜி.ஆர். படங்கள் வெளியான ஆண்டு, இயக்குனர், கதாப்பாத்திரங்கள் என அனைத்தும் துல்லியமாக எனக்குத் தெரியும். எம்.ஜி.ஆர் படங்களில் ராணிஎன்கிற பெயரும், பாத்திரமும் அதிகமாக இருந்ததைப் பார்த்து, என் மகளுக்கு 1976-இல் ராணி என்று பெயர் வைத்தேன்.அதன்பின் 1963-இல் வெளியான கலை அரசிபடத்தின் தாக்கத்தால், 1987-இல் பிறந்த என் பேத்திக்கு கலையரசிஎன்று பெயர் வைத்தேன்என்று கூறும் இந்த முதிந்த எம்.ஜி.ஆர் ரசிகரின் குடும்பம் அவரது அப்பா காலத்திலிருந்தே கிறிஸ்தவ மரபை தீவிரமாகப் பின்பற்றி வருகிறது. இவரது பெயரே கிறிஸ்தவமுறைப்படி ஞானஸ்தானம் கொடுத்து சூட்டப்பட்டது.
எம்.ஜி.ஆரின் பதினொரு வருட ஆட்சிக்காலம் சந்தேகமே இல்லாமல் சமகால வரலாற்றின் இருண்டகாலம் என்பதைத் தெளிந்து, "அவரது அரசியல் வெற்றியால் வியப்பும் வேதனையும் அடைந்த பலரில் நானும் ஒருவன்" (.xviii) என்னும் பாண்டியனின் கூற்றில் ஒரு ஆய்வாளனின் சமூக அக்கறை தொனிக்கிறது. தரவுகளைப் பயன்படுத்தும் முறையும், பகுத்தாயும் முறையும் பாண்டியனின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றன. இந்தத் தனித்துவம் தான் சிலருக்கு, பாண்டியனைதி.மு.. மார்க்சியவாதியாக” (DMK Marxist) இனம் காட்டுகிறது. ஆனால் பாண்டியனின் ஆய்வு விளிம்புநிலை மக்களின் நலன் சார்ந்தது. விளிம்புநிலை மக்களின் நலன் பேணும் எந்த கோட்பாட்டிற்குள்ளும் தேங்கிவிடாமல், புதுப்பித்துக் கொண்டே நகரக்கூடியது.
ஆங்கிலத்தில் பாண்டியனின் நடையும், கையாளும் சொல்லாட்சியும் அபாரமானது. பூ.கொ.சரவணனின் தமிழ் மொழிபெயர்ப்பு பாண்டியனின் நடையை ஒத்து, இரயில் தண்டவாளம் போல் இணைந்து போகிறது. ஆங்கிலத்தில் பாண்டியன் பயன்படுத்தும் சில சமூகவியல் கலைச்சொற்களைத் தமிழில் பெயர்க்கையில் போதாமை மேலிடுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் அத்தியாயத்தில் சில பின் குறிப்புகள் விடுபட்டிருக்கின்றன.
தமிழ் நாட்டில் அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தை தன்னிகரற்ற கடவுளாகக் காட்டிக்கொண்டிருக்கும் சூழலில், அடித்தள மக்களின் மீதான அக்கறையோடும், நியாயத்தோடும் எம்.ஜி.ஆரைப் பற்றி விவரிக்கும் இந்நூல், தமிழர்களின் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தை கட்டுடைக்கும் வலிமை கொண்டது. எம்.ஜி.ஆரின் மோசமான ஆட்சி குறித்து தீர்க்கமான ஒரு முடிவை பாண்டியனால் முன்வைக்க முடிகிறது. முன்னுரையில் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுவது போல், பாண்டியன் எதற்கும் வளைந்து கொடுக்காத வணங்காமுடி. பணம், பதவி போன்றவற்றை அற்பமாகக் கருதும் மனமே அறவழியை நாடும் என்பது நம் மரபில் உள்ள நீதி. பாண்டியன் அந்த வழியில் தான் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றியை அணுகியிருக்கிறார்.
2010-இல், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, ஏதோ ஒரு சூழலில் பாண்டியனிடம், “ஏன் சார் நீங்க தமிழ்ல எழுதுறதில்ல?” என்று கேட்டேன். புன்னகைத்தவாறு யாரு படிக்கிறா?” என்று திருப்பிக் கேட்டார். தமிழ்ச்சமூகத்தின் மீதிருந்த அவரது அக்கறையின் வெளிப்பாடாகவே அது எனக்குப்பட்டது. அவரது மறைவுக்குப் பின், இப்போது முதன்முதலாக அவரது முழுநூல் தமிழில் வந்திருக்கிறது.  



[1] திராவிட இயக்கம் பல ஆண்டுகளாக மேற்கொண்டுவந்த மத எதிர்ப்புப்பிரச்சாரத்தை நீர்த்துப்போகச் செய்து, மத உணர்விற்கு கொம்பு சீவிவிடும் நடவடிக்கைகள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவர் காலத்திலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைகள் எல்லாமே, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நோயுற்றிருந்த காலத்திலும், அவர்களுக்கு நிகழ்ந்த துயரங்களின் போதும்,கடவுளோடு  இவர்களை (மனிதர்களை)இணைத்து முன்னெடுக்கப்பட்டவை. எம்.ஜி.ஆர். நோயுற்றிருந்த காலத்தில், அவர் நலம்பெற வேண்டி எண்ணற்ற தொண்டர்கள் கை,விரல் போன்ற உடல் உறுப்புகளை வெட்டி கடவுளுக்கு காணிக்கையாக்கினர். அதே போன்று ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்து சிறை சென்ற போதும், மிகச் சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவர் அத்துயரங்களில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டி ...தி.மு.. தொண்டர்கள் (இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்) தத்தம் மத நம்பிக்கை சார்ந்த தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்த நம்பிக்கைகளுக்கு தி.மு..வும் விதிவிலக்கல்ல. கருணாநிதியின் உடல் சுகவீனங்களின் போது தி.மு..வினர் மத நம்பிக்கையிலான மீட்பை சிறிய அளவில் மேற்கொள்கின்றனர். பிற இயக்கங்களை விட தி.மு..வின் இந்த மத நடவடிக்கைகளில் தான், மத எதிர்ப்பிற்கு எதிரான தன் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மறைமுகமாக ஈடுபடுகின்றன சில பார்ப்பணிய நாளிதழ்கள். மேலும், தி.மு.க. வின் மத நடவடிக்கைகளை முதன்மைச்செய்தியாக வெளிட்டு அதில் உள்ள முரண்நகையில் மகிழ்கின்றன.சமீபத்திய செய்தியை பார்க்க: தினமலர்,27-10-2016.   
­# காட்சிப்ப்பிம்பங்கள் தனது செல்வாக்கிற்கு ஒருபோதும் இழுக்கு ஏற்படுத்தாத வண்ணம் கவனமாக பார்த்துக்கொள்ளும் அரசியல் உத்தி பொதுவானதாக இருக்கின்றது.எம்.ஜி.ஆர். தன் பிம்பங்களை தவறியும் கூட அடித்தட்டு மக்களுக்கு விரோதமாகவோ, பெண்களுக்கு எதிராகவோ (மது அருந்துதல் முதலியன) கட்டமைத்ததில்லை. அதே போன்று அரசுத்திட்டங்கள், பொருட்கள் அனைத்திலும் தன் புகைப்படத்தைப் பயன்படுத்திய ஜெயலலிதா, அரசுத்திட்டங்களில் முதன்மை வகித்து தமிழக அரசிற்கு ஆண்டிற்கு இருபதாயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டித்தரும்டாஸ்மாக்’ கடைகளிலோ, மது பாட்டில்களிலோ தன் புகைப்படம் இடம்பெறாதவாறு மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டார். இதை கருணாநிதியும் பின்பற்றினார்.
# அச்சு ஊடகங்களில் எம்.ஜி.ஆரின் பிம்பம் அவரது காலத்தைப்போன்று, இப்போதும் ஒரே மாதிரியே கட்டமைக்கப்படுகிறது.விரிவாக அறிய, பார்க்க: 3-வது அடிக்குறிப்பு.

[2] எம்.ஜி.ஆர். இறந்து இருபத்து ஒன்பது ஆண்டுகள் ஆகும் நிலையிலும், தமிழ் அச்சு ஊடகங்கள் அவரின் புகழ் பாடும் தொடர்களையும், கட்டுரைகளையும், துணுக்குகளையும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனசமீபத்திய உதாரணம்: தொடர்கள்: "மக்கள் தலைவன் - ஆயிரத்தில் ஒருவன்" (குமுதம்,21-9-16); ஒரே ஒரு எம்.ஜி.ஆர். (புதியதலைமுறை, 20-10-2016). கட்டுரைகள்: "எட்டாவது வள்ளலும் (எம்.ஜி.ஆர்) .வி.எம்.சரவணனும்" (புதிய தலைமுறை, 06-10-16). எம்.எஸ்.எஸ்.பாண்டியன் இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (1992-இல் வெளியான இந்நூலின் ஆங்கில மூலம் The Image Trap: M G Ramachandran in Film and Politics) ஆராய்ந்து கூறியது போல், எம்.ஜி.ஆர். செல்வாக்கின் ஈர்ப்பினால் முகஸ்துதி செய்யும் பாணியில் தான் இத்தொடர்கள் இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆரின் சுயசரிதையானநான் ஏன் பிறந்தேன்?” பெண்கள் வார இதழான ராணியில் இப்போது (நவம்பர்-2016) தொடராக வந்துகொண்டிருக்கிறது.

[3] தமிழகத்தில் உள்ள இந்துக்கோவில்களில் பணிபுரிபவர்களின் மேம்பாடு, பூஜை, மரத்தேர், அன்னதானக்கூடம், மகா மண்டபம், பக்தர்கள் ஓய்வுக்கூடம், கோயில் விபரங்கள் கணினிமயமாக்கம் போன்றவற்றிற்காக பலகோடி ரூபாய் திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார் ஜெயலலிதா. மேலும் அறிய, பார்க்க: தினமலர், 20-09-2016. 

காலச்சுவடு, டிசம்பர் 2016

கருத்துகள் இல்லை: