செவ்வாய், 3 நவம்பர், 2020

LOCKDOWN LYRICS - ஆசிரியர்களின் கொரோனா


சமீபத்தில் மறைந்த மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள் கொரோனா காலத்தில் தொகுத்து மொழிபெயர்த்த 100 கவிதைகளில் எனது கவிதை. 

ஆய்வுத்தடம்: தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்: ஒலியியல் ஒப்பாய்வு


 

மொழியியலின் ஒரு பிரிவான இலக்கண ஒப்பாய்வை (Comparative grammar) தமிழ் மரபிலக்கண வரலாற்றில் இருநிலைகளில் காணலாம். மக்களின் வழக்கில் உள்ள ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கும் ஓர் இலக்கணி, தன்னுடைய விளக்குமுறை இலக்கணத்தில் அதே நிலத்தில் வழங்கும் மற்றொரு மொழியை ஒப்பிட்டு விளக்குவது முதல் வகை. இதற்கு சிறந்த உதாரணம் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர். அவர் தன்னுடைய விளக்குமுறையில் தமிழ் மொழியை சமஸ்கிருத மொழியோடு ஒப்பிட்டு, இரு மொழியியல் மரபுகளும் வெவ்வேறானவை என வேறுபடுத்திக் காட்டும் இடங்கள் நிறைய உண்டு. இது மொழியின் இலக்கண அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒப்பாய்வு.

 இரண்டாவது வகை இலக்கண விளக்கத்தை ஒப்பாய்வு செய்வதாகும். இந்தச் சிந்தனையை தமிழில் தொடங்கி வைத்தவர்கள் இலக்கண உரையாசிரியர்களே, குறிப்பாக பிற்கால இலக்கண உரையாசிரியர்களே ஆவர். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்ண்டைச் சார்ந்த நன்னூலுக்கு உரை வகுத்த மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர் ஆகியோரின் உரைகள் நன்னூலை தொல்காப்பியத்தோடு ஒப்பிட்டு, தமிழ் மொழியின் இலக்கணத்தை விளக்கும் முறையில் தொல்காப்பியருக்கும், பவனந்தி முனிவருக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டின. அதன் தொடர்ச்சியாக 1858-இல் சாமுவேல்பிள்ளை ‘தொல்காப்பிய நன்னூல்’ என்றொரு ஒப்பியல் பதிப்பை வெளியிடுகிறார். அதில் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு இலக்கணங்களின் பாயிரம், எழுத்து, சொல் என்னும் முறையில் மூலத்தை மட்டும் பதிப்பிக்கிறார். தொல்காப்பியத்துக்கு முதல் மூலப்பதிப்பாக அமைந்த இப்பதிப்பு முதல் இலக்கண ஒப்பியல் நூலாகவும் திகழ்கிறது. இந்த விளக்குமுறை ஒப்பாய்வுகள் நன்னூலை தொல்காப்பியத்தின் வழிநூலாக அடையாளப்படுத்தின. தமிழ் இலக்கண ஆசிரியர்களில் தமிழ்நூல்வழி தமிழாசிரியர், வடநூல்வழி தமிழாசிரியர் என்னும் இரு மரபினரில் முதல் மரபினரான தொல்காப்பியர், பவனந்தி ஆகிய இருவரின் தமிழ் மொழி விளக்கத்தை ஒப்பிடுவதிலிருந்தே, தமிழில் இலக்கண விளக்கங்களை அல்லது  இலக்கண நூல்களை ஒப்பிடும் முறை தோன்றியது. 1875-இல் ஏ.சி.பர்னல் தொல்காப்பியர் கையாளும் கலைச்சொற்களை சமஸ்கிருத இலக்கணங்களான காதந்திரம், அஷ்டாத்தியாயி, பாலி இலக்கணமாண கச்சாயணம் முதலியவற்றுடன் ஒப்பிட்டு தொல்காப்பியம் ஐந்திர மரபைச் சார்ந்தது என குறிப்பிட்டார். இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழில் தொடங்கிய இலக்கண ஒப்பாய்வு இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்தது. பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி, க.பாலசுப்பிரமணியம், க.முருகையன், கு.மீனாட்சி முதலியோர் தொல்காப்பியத்தை சமஸ்கிருத இலக்கணங்களோடும், ஒலியியல் நூல்களோடும் ஒப்பிட்டார்கள். ச.வே.சுப்பிரமணியன் (1967), க.ப.அறவாணன் (1975) ஆகியோர் தொல்காப்பிய மூலத்துடன் பிற தமிழ் இலக்கணங்களின் மூலத்தை ஒப்பிட்டு ஒப்பியல் பதிப்புகளைக் கொண்டுவந்தார்கள். அது தொல்காப்பியத்தைப் பிற தமிழ் இலக்கணங்களோடு ஒப்பிடும் இலக்கண ஒப்பாய்விற்கு வழிவகுத்தது. மற்றொருபுறம், பிற திராவிட மொழி இலக்கணக்களான ‘லீலாதிலகம்’, ‘கேரளப்பாணினியம்’ (மலையாளம்), ‘கவிராஜமார்க்கம்’ (கன்னடம்), ‘ஆந்திர ஸப்தசிந்தாமணி’, ‘பாலவியாகரணமு’ (தெலுங்கு) முதலியவற்றோடும், ‘கச்சாயணம்’ (பாலி), ‘பிராகிருத பிரகாசிகா’ (பிராகிருதம்), ‘சித்தத்சங்கரவா’ (சிங்களம்) முதலிய பிற மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மரபிலக்கணங்களோடும் தொல்காப்பியத்தை ஒப்பிட்டு இலக்கண ஒப்பாய்வு வளர்ந்தது. இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் இலக்கண ஒப்பாய்வை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் வகையில், உலகின் பழமையான மொழிகளாகவும், நீண்ட இலக்கிய-இலக்கண வளமுடைய மொழிகளாகவும் திகழும் கிரேக்கம், லத்தின், சீனம், அறபு, ஹீப்ரு முதலிய செம்மொழிகளின் மரபிலக்கணங்களை தொல்காப்பியத்தோடு ஒப்பிட்டு ஆராய்வது முக்கியமானதாகும்.  

தமிழ், அறபு ஆகிய மொழிகளின் முதல் இலக்கணமாகத் திகழும்  தொல்காப்பியம், அல்-கிதாப்பு ஆகிய இரு இலக்கணங்களும் தத்தம் மொழியை விளக்குமுறை மொழியியல் நோக்கில் விரிவாக விளக்குகின்றன. தொல்காப்பியம் தமிழ் மொழியை ஒலியனியல், உருபனியல், தொடரியல் என்னும் முறையில் விளக்குகிறது. அல்-கிதாப்பு அறபு மொழியை தொடரியல், உருபனியல், ஒலியனியல் என்ற முறையில் விவரிக்கிறது.

மொழியின் முதன்மையான கூறுகளான ஒலியனியல், உருபொலியனியல் பற்றி எழுத்ததிகாரத்தின் ஒன்பது இயல்களில் பேசுகிறது தொல்காப்பியம். அதேபோன்று, அல்-கிதாப்பு இறுதி ஏழு இயல்களில் (இயல்:565-571) அவை குறித்து பேசுகிறது. ஒலியனியல், ஒலியியல், ஒலிப்பியல் என உள்நோக்கிப் பிரிந்துசெல்லும் மொழியியல் கூறுகளில் முதன்மையானதாக விளங்குவது ‘ஒலிப்பியல்’ அல்லது ‘பிறப்பியல்’. ‘பிறப்பியல்’ தொல்காப்பியத்திலும் அல்-கிதாப்பிலும் தனி இயலாக இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் மூன்றாவது இயலிலும், அல்-கிதாப்பு 565-வது இயலிலும் ஒலிகளின் பிறப்பை மிகச்சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரிக்கின்றன.

ஒலிப்பிடத்தையும் ஒலிப்புமுறையையும் அடிப்படையாகக் கொண்டு ஒலிகள் பிறக்கின்றன. ஒலிகளின் அவ்விரு ஒலிப்பியல் கூறுகளையும் அதனோடு தொடர்புடைய பிற ஒலியியல் கூறுகளையும் உள்ளடக்கியதே ‘ஒலியியல்’. தொல்காப்பியம், அல்-கிதாப்பு ஆகிய இரு நூல்களின் ஒலியியல் கொள்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒலியியல் கூறுகளான ‘ஒலிப்புமுறை ஒலியியல்’ (Articulatory Phonetics),  ‘இயங்குமுறை ஒலியியல்’ (Acoustic Phonetics), ‘கேட்புமுறை ஒலியியல்’ (Auditory Phonetics) ஆகிய மூன்றின் வழியாக அணுக வேண்டும். இவ்வாய்வு தொல்காப்பியம், அல்-கிதாப்பு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள பிறப்பியலை அடிப்படையாகக் கொண்டு, தொல்காப்பியர் (தொல்காப்பியத்தின் ஆசிரியர்), ஸீபவைஹி (அல்-கிதாப்பின் ஆசிரியர்) ஆகிய இரு மரபிலக்கணிகளின் ஒலியியல் கொள்கையை விளக்குகிறது. ஆய்வேட்டின் முதல் பகுதி இரு இலக்கணங்களின் ஒலியியல் கருத்துக்களை இரு இயல்களில் தனித்தனியே விவரிக்கிறது. அதனைத் தொடர்ந்து வரும்  மையப்பகுதி, இரு இலக்கணங்களின் ஒலியியல் கருத்துக்களை (இலக்கணக்கோட்பாடு, பகுப்பாய்வுமுறை முதலியன) ஒப்பிட்டு அவற்றிற்குள் உள்ள ஒற்றுமை, வேற்றுமை, சிறப்பியல்பு முதலியவற்றை இனம் காண்கிறது. இறுதிப்பகுதி இரு இலக்கணங்களுக்கும் உள்ள ஒற்றுமைக்கூறுகள் வழி, தமிழ் இலக்கண மரபிற்கும் அறபு இலக்கண மரபிற்கும் உள்ள தொடர்பு பற்றி விவாதிக்கிறது.

 தொல்காப்பியர் தமிழ்ப் பேச்சொலிகளை வரிசைப்படத் தெளிவாக விவரிக்கின்றார். ‘எழுத்தெனப்படுப’ எனத்தொடங்கி தமிழ் ஒலிகளின் அமைப்பை பின்வருமாறு விளக்குகின்றார். ஒலி, மாற்றொலி, குற்றுயிர், நெட்டுயிர், மெய், மாத்திரை, மெய்யொலிகளின் வகைகள் என முறைபட விளக்குகின்றார். உயிரொலிகளை ஒலியியல் நோக்கில் விளக்கும் போது அவற்றின் ஒலிப்பிடத்தை மிடற்றில் தோன்றும் காற்றில் சுட்டுகின்றார். பிற்காலத் தமிழ் இலக்கணிகள் யாரும் உயிரொலிகளுக்கு பிறப்பிடம் சுட்டவில்லை. ஒலிகளின் ஒலிப்பிடத்தை வரையறுக்கும் போது முறையே உயிர், மெய், மாற்றொலி என்ற வரிசையைப் பின்பற்றுகின்றார். ஒலிகளின் அகரவரிசை, வகைப்பாடு, மாத்திரை அளபு முதலியன பற்றிக் கூறும்போதெல்லாம் ‘என்ப’, ‘மொழிப’ முதலிய மேற்கோள்களையும் சுட்டுகின்றார். இம்மேற்கோள்கள் தமிழ் மரபில், அகரவரிசை, வகை, மாத்திரை முதலியன ஏற்கன‌வே உள்ளன என்பதை உணர்த்துகின்றன. ஆனால், ஒலிகளுக்குரிய ஒலிப்பிடத்தையும் ஒலிப்புமுறையையும் தொல்காப்பியர் தான் வரையறுக்கின்றார். இதில் அவர் யாரையும் பின்பற்றவில்லை.

அகரவரிசை, ஒலிகளை வகைப்படுத்தல், மாத்திரை கூறல், ஒலிப்பிடங்களை வரையறுத்தல் என ஒலிகளை வகைதொகைப்படுத்திக் கூறும் எல்லா இடங்களிலும், மேலே வகைப்படுத்தியுள்ள ஒலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக் கூறும் உத்தி தொல்காப்பியரின் சிறப்புகளுள் ஒன்று. பிற்கால இலக்கணிகள் தங்கள் விளக்குமுறையில் தொல்காப்பியர் போன்று ஒலிகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிட்டுக் கூறவில்லை.  இவைபோன்ற தொல்காப்பியரின் ஒலியியல் விளக்கக்கொள்கையை விரிவாகப் பேசுகிறது முதல் இயல்.

இரண்டாவது இயல் ஸீபவைஹியின் ஒலியியல் விளக்கக் கொள்கையை ஆழமாக விவரிக்கிறது. அறபு ஒலிகளின் ஒலியியல், உருபொலியனியல் கூறுகள் பற்றி அல்-கிதாப்பின் இறுதி ஏழு இயல்களில் (இயல்:565-571) ஸீபவைஹி விளக்குகின்றார். இவ்வேழு இயல்களில் (ஒலியனியல் பகுதி) முதல் இயலான 565வது இயலில், அறபு ஒலிகளின் பிறப்பு (Articulatory phonetics) பற்றிக் குறிப்பிடுகின்றார். அறபு ஒலிகளின் பிறப்பு பற்றிப் பேசுவதால் அவ்வியலை இங்கு பிறப்பியல் என்றே குறிக்கப்படுகிறது. இவ்வியலில் அறபு ஒலிகளின் ஒலிப்பியல் கூறுகளை முதன்மையாகப் பேசினாலும் ஒலியியலின் பிற கூறுகளான இயக்கவியல், கேட்புமுறை பற்றியும்  ஸீபவைஹி குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியத்தில் மூன்றாவது இயலாக வரும் பிறப்பியல், “பிறப்பியல்” என்ற ஒற்றைச்சொல்லை தலைப்பாகக் கொண்டு தொடங்குகிறது. அல்கிதாப்பில் ஒலியனியல் பகுதி, “இவ்வியல் ஒருங்கிணைந்த அறபு ஒலிகள் பற்றியது” “الإدغام باب هذا” என்று தொடங்குகிறது. இத்தலைப்பு பிறப்பியலுக்கும் பிறப்பியலைத் தொடர்ந்து வந்து அறபு ஒலிகளின் ஒலியனியல் கூறுகள் பற்றிப்பேசும் பிற ஆறு இயல்களுக்கும் (566-571) பொதுவான தலைப்பு ஆகும். அதாவது தொல்காப்பியத்தில் நூன்மரபிற்கு முன்பு வரும் ‘எழுத்ததிகாரம்’ போன்று. அதற்குப்பின் தான் பிறப்பியலுக்கென தனித்தலைப்பு நெடுந்தொடராக பின்வருமாறு அமைகின்றார் ஸீபவைஹி: “அறபு எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை, அவ்வொலிகளின் ஒலிப்பிடம், குரல்நாள அதிர்வுடைய, அதிர்வில்லாத் தன்மை, அவற்றின் இயல்பு, அவற்றிற்கிடையிலான (குரல்நாள அதிர்வுடைய, அதிர்வில்லா தன்மை) வேறுபாடு முதலியன பற்றி இவ்வியல் விளக்குகின்றது”

   هذا باب عدد الحروف العربيةِ، ومَخارجها، ومهموسِها ومجهورِها، وأحوالِ مجهورِها ومهموسِها، واختلافها

– ஹா.ப.,தொ.4,ப.431

அல்கிதாப்பின் பிறப்பியலில் பேச்சொலியைக் குறிக்க “ஹற்ஃப்” (حرف) என்னும் சொல்லை ஸீபவைஹி பயன்படுத்துகிறார். அல்கிதாப்பிற்குள் இச்சொல் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லாக வருகிறது. அதாவது பின்வரும் ஆறு பொருள்களின் இச்சொல்லை ஸீபவைஹி கையாள்கின்றார்.  அவை: (1)ஒலியன், (2)ஒலியின் வரிவடிவம், (3)அசை, (4)இடைச்சொல், (5)சொல்(பதம்), (6)ஹம்ஜா (குரல்வளை ஒலி). இதே சொல் குற்ஆனுக்குள் ‘கிளைமொழி’ என்னும் பொருளில் வருகின்றது.  

ஸீபவைஹி பின்வரும் வரிசை முறையில் பிறப்பியலை அமைக்கின்றார்:

1. இருபத்தொன்பது அறபு ஒலிகளின் பெயரும் வரிசையும்

2. குற்ஆனும், அறபுக்கவிதைகளும் ஏற்றுக்கொள்ளும் ஆறு மாற்றொலிகள்

   (Derived sounds)

3. குற்ஆனும்,அறபுக்கவிதைகளும் ஏற்றுக்கொள்ளாத ஏழு மாற்றொலிகள்

   (Unfavoured derived sounds)

4. இருபத்தொன்பது மூல அறபு ஒலிகளின் பதினாறு ஒலிப்பிடங்கள்

5. குரல்நாள அதிர்வுடைய ஒலிகள் (Voiced)

6. குரல்நாள அதிர்வில்லா ஒலிகள் (Unvoiced)

7. இறுக்கமான ஒலிகள் (Tight) / அடைப்பொலிகள் (Stops)

8. இறுக்கமற்ற ஒலிகள் (Slack) / உரசொலிகள் (Fricatives)

9. மருங்கொலிகள் (Lateral)

10. மூக்கொலிகள் (Nasality)

11. வருடொலிகள் (Trilled)

12. உயிரொலிகள் (Vowels)

i.மென்மையானவை (Soft)

ii.நீட்டம் உடையவை (Prolongation)

13. மூடிய நிலையில் தோன்றும் மெய்யொலிகள் (Cover)

14. திறந்த நிலையில் தோன்றும் மெய்யொலிகள் (Open)

மேற்கண்ட வரிசைமுறையில் அறபு ஒலிகளை விவரிக்கும் போது இரு வகையான விளக்குமுறைகளை ஸீபவைஹி பின்பற்றுகிறார். அதாவது அறபு ஒலிகளின் ஒலிப்பியல்/ஒலியியல் கூறுகளை முதலில் ஒலிப்பிடத்தின் (basis points of articulation) அடிப்படையிலும், பின்பு ஒலிப்புமுறையின் (basis manner of articulation) அடிப்படையிலும் விளக்குகிறார்.

I. ஒலிப்பிடத்தின் அடிப்படையில் பிறப்பியல் விளக்கம் (basis points of articulation):

பிறப்பியலின் தொடக்கத்தில் அறபு ஒலிகளை ஒலிப்பிடத்தின் அடிப்படையில் ஸீபவைஹி விளக்குகின்றார். இப்பகுதியில், ஒலிகளைத் தோற்றுவிப்பதில் ஒலியுறுப்புக்களின் பங்கு, ஒலிப்பிடத்தின் அடிப்படையில் ஒலிகளை வரிசைப் படுத்துதல், மாற்றொலிகளின் ஒலிப்பிடத்தை வரையறுக்கும் போது, மூல ஒலிகளின் ஒலிப்பிடத்தை அடிப்படையாகக் கொள்ளுதல் என மூல ஒலிகளையும் மாற்றொலிகளையும் அவற்றின் ஒலிப்பிடத்தின் அடிப்படையில் விளக்குகின்றார். ஒலிப்பிடத்தின் அடிப்படையிலான விளக்கம் பின்வரும் முறையில் அமைகின்றது.   

1. இருபத்தொன்பது அறபு ஒலிகளின் பெயரும் வரிசையும்

2. குற்ஆனும், அறபுக்கவிதைகளும் ஏற்றுக்கொள்ளும் ஆறு மாற்றொலிகள்

3. குற்ஆனும், அறபுக்கவிதைகளும் ஏற்றுக்கொள்ளாத ஏழு மாற்றொலிகள்

4. இருபத்தொன்பது மூல அறபு ஒலிகளின் பதினாறு ஒலிப்பிடங்கள்.  

II. ஒலிப்புமுறையின் அடிப்படையில் பிறப்பியல் விளக்கம் (basis manner of articulation):    

பிறப்பியலின் பிற்பகுதியில், அறபு ஒலிகளை ஒலிப்புமுறையின் அடிப்படையில் ஸீபவைஹி விளக்குகின்றார். இப்பகுதியில், ஒலிகளை மெய்யொலிகள், உயிரொலிகள் என இருவகையாகப் பகுக்கின்றார். இவற்றுள், முதலில் மெய்யொலிகளையும் பின்பு உயிரொலிகளையும் விளக்குகின்றார். மெய்யொலிகளை அவற்றின் ஒலிப்புமுறையின் அடிப்படையில் ஒன்பது வகையாகப் பகுக்கின்றார். அவை: 

மெய்யொலிகள்:

1. குரல்நாள அதிர்வுடைய ஒலிகள் (Voiced)

2. குரல்நாள அதிர்வில்லா ஒலிகள் (Unvoiced)

3. இறுக்கமான ஒலிகள் (Tight) / அடைப்பொலிகள் (Stops)

4. இறுக்கமற்ற ஒலிகள் (Slack) / உரசொலிகள் (Fricatives)

5. மூடிய நிலையில் தோன்றும் ஒலிகள் (Cover)

6. திறந்த நிலையில் தோன்றும் ஒலிகள் (Open)

7. மருங்கொலி (Lateral)

8. மூக்கொலி (Nasal)

9. ஆடொலி (Trill)

உயிரொலிகள்:

1. மென்மையானவை (Soft)

2. நீட்டம் உடையவை (Prolongation)

            இந்த முறையில் அல்-கிதாப்பின் பிறப்பியல் அமைந்துள்ளது.

ஆய்வேட்டின் மையப்பகுதியில் உள்ள வேறுபாட்டுக் கூறுகள் பற்றிய இயல்   தொல்காப்பியத்திற்கும் அல்-கிதாப்பிற்கும் உள்ள ஒற்றுமைகளை விட வேறுபாடுகளே அதிகம் என வாதிடுகிறது.  பேச்சொலிகளைக் கணக்கிடும் முறை, ஒலிகளை வகைப்படுத்தி அவற்றின் எண்ணிக்கையைக் கூறும் முறை, ஒலிப்புக்காலத்தை வரையறுத்தல், குறில்-நெடில் விளக்கம்,   முன்னுயிரின் [ī] பிறப்பு, மெய்யொலிகளின் ஒலிப்பிடம் ஒலிப்புமுறை பற்றிய விளக்கம், மாற்றொலி விளக்கம், வரையறை, ஒலிப்பிடம், வகைப்பாடு, மாற்றொலியின் மூல ஒலி, மாற்றொலிக்கு ஆதாரமாக விளங்கும் கூறுகள், மாற்றொலி விளக்கத்தில் கலைச்சொல் பயன்பாடு, சுருங்ககூறி விளங்கவைக்கும் உத்தி, ஒலிகளைத் தொகைப்படுத்தும் முறை, கருவி மொழிக்கு இலக்கணம் செய்தல் முதலிய கூறுகளில் இரு இலக்கணங்களும் முற்றிலும் வேறுபடுகின்றன.

தொல்காப்பியம், அல்-கிதாப்பு ஆகிய இரு மரபிலக்கணங்களை ஒலியியல் நோக்கில் ஒப்பிடும்போது, அடிப்படையான சில வேறுபாடுகளைக் காணலாம். பேச்சொலிகளின் வைப்புமுறை, மாற்றொலி விளக்கம் முதலிய கூறுகளில் உள்ள வேறுபாடுகள் அம்மொழிகளின் இலக்கண மரபிலிருந்து உருவாகின்றன. மாத்திரை, உயிரொலிகளின் பிறப்பு முதலிய இலக்கணக்கூறுகள் இலக்கணிகளின் சிந்தனை மரபிற்கேற்ப மாறுபடுகின்றன என வேறுபாடுகள் பற்றி விவரிக்கிறது. 

தமிழுக்கும் அறபிக்கும் மொழிக்குடும்பம், வழங்குமிடம், எழுத்து, எழுதும்முறை என்று அடிப்படையான வேறுபாடுகள் நிறைய உண்டு. ஆயினும், இவ்விரு மொழியிலும் உள்ள முதல் இலக்கணங்களாகத் திகழும் தொல்காப்பியத்தையும், அல்-கிதாப்பையும் தற்கால மொழியியலின் வழி ஒப்பாய்வு செய்கையில் சில ஒற்றுமைக் கூறுகளை இனம்காண  முடிகிறது. இரு இலக்கணங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளில் சில உலக மரபிலக்கணங்களின் பொதுக்கூறாக விளங்கினாலும், சில கூறுகள் தொல்காப்பியத்திற்கும் அல்-கிதாப்பிற்கும் மட்டும் பொதுவானவையாக இருக்கின்றன.  

ஒலி என்றால் என்ன? என்பதற்கு வரையறை கூறாமை, ஒலியைக் குறிக்க தனிச்சொல் பயன்படுத்தாமை, ஒலியைக் குறிக்க பலபொருள் கொண்ட ஒரு சொல்லைக் கையாளுதல்,  ஒலிகளின் ஒலிப்பிட விளக்கத்தில் இயங்கும் ஒலியெழுப்பியையும், இயங்கா ஒலியைழுப்பியையும் ஒரே முறைமையில் பயன்படுத்துதல், காற்றறையில் பிறக்கும் ஒலியை தனியாகப் பகுத்து இறுதியில் குறிப்பிடுதல், மாற்றொலி பற்றி விரிவாகப் பேசுதல் முதலிய விளக்குமுறைக் கூறுகளில் உள்ள ஒற்றுமையையும், பேச்சொலிக்கோட்பாடு, பிறப்பியல் கோட்பாடு, மாற்றொலிக்கோட்பாடு முதலிய ஒலியியல் கோட்பாடுகளில் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையையும் ஒப்புநோக்குகையில்,  மொழிக்கு இலக்கணம் செய்யும் முறையில் மரபிலக்கணிகள் இவ்வாறு ஒரேமாதிரி சிந்திக்க வாய்ப்பிருக்கிறது என்றோ, இது தற்செயலாக நிகழ்ந்த ஒற்றுமை என்றோ கடந்துபோக முடியவில்லை.      

தொல்காப்பியத்தை விட ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பிற்பட்டது அல்-கிதாபு. தமிழ் இலக்கணக் சிந்தனைகள் அறபு நாடுகளுக்கும் பரவியிருக்கலாம் என்னும் கருத்தை அரிதியிட்டுக் கூறுவதற்கு தொல்பொருள், கல்வெட்டு, இலக்கியம் சார்ந்த போதுமான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில்,  இந்த ஒற்றுமைகளை அறபுக்கும் தமிழுக்கும் இடையிலான இலக்கண-மொழியியல் உறவிற்கு இலக்கண நூல்களிலிருந்து கிடைக்கும் ஓர் அகச்சான்றாகக் கருதலாம் என்று வாதிடுகிறது ஒற்றுமைக்கூறுகள் பற்றி விவரிக்கும் இயல்.

ஆய்வேட்டின் இறுதிப்பகுதி தமிழ்-அறபு ஆகிய இரு மொழிகளின் இலக்கண மரபுகளுக்குள் உள்ள உறவு பற்றி பின்வருமாறு விவாதிக்கிறது. திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த தமிழும், செமிட்டிக் மொழிக்குடும்பத்தைச் சார்ந்த அறபும் மிகச்சிறந்த இலக்கிய-இலக்கணப் பாரம்பரியம் உடைய மொழிகள். உலக மொழியியல் வரலாற்றில் பண்டைக்காலத்தைச் (Ancient period) சார்ந்த தமிழ் இலக்கண மரபும், இடைக்காலத்தைச்சார்ந்த (Medievel period) அறபு இலக்கணமரபும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழ், அறபு ஆகிய இரு மொழிகளின் மொழியியல் மரபுகளை ஒப்பிடுகையில், நீண்ட மொழியியல் மரபைக் கொண்ட தமிழில் அதிகமான இலக்கணங்களும், நிகண்டுகளும் தோன்றியுள்ளதை அறியமுடிகிறது. கி.மு.300-லிருந்து தொடங்கும் தமிழ் மொழியியல் மரபில் தோன்றியவையாக 49 இலக்கணங்களும் 23 நிகண்டுகளும் இன்று கிடைக்கின்றன.  கி.பி. 800-லிருந்து தொடங்கும் அறபு மொழியியல் மரபில் தோன்றியவையாக 38 இலக்கணங்களும் 22 நிகண்டுகளும்/அகராதிகளும் இன்று கிடைக்கின்றன. தமிழ் மொழியியல் மரபில் இலக்கணமே முதலில் தோன்றியது. தொல்காப்பியமே இன்று கிடைக்கும் முதல் இலக்கணமாகத் திகழ்கிறது. தமிழில் முதல் இலக்கணம் (தொல்காப்பியம்:கி.மு.300) தோன்றி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கழித்து முதல் நிகண்டு (திவாகர நிகண்டு:கி.பி.800)தோன்றியது. அறபு மொழியியல் மரபு இதற்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது. அறபு மொழியியல் மரபு நிகண்டிலிருந்துதான் தொடங்குகிறது. ஸீபவைஹியின் ஆசிரியரான அல்-க்ஹலீல்(கி.பி.718–786) தான்  அறபியின் முதல் நிகண்டை (அல்-அய்னி) எழுதினார். அறபியின் முதல் இலக்கணமான அல்-கிதாப்பிற்கு முதன்மைத் தரவாக அறபியின் முதல் நிகண்டு அமைந்துள்ளது. அறபியில் முதல் அகராதி தோன்றிய ஐம்பது ஆண்டிற்குள் முதல் இலக்கணமும் (அல்-கிதாப்பு) தோன்றியது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தமிழ், அறபு ஆகிய இரு மொழியியல் மரபுகளிலும் இலக்கணமும் நிகண்டும் இணைந்தே தோன்றின. தமிழில் பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கணங்களும் திவாகர நிகண்டும் தோன்றிய கி.பி.எட்டாம் நூற்றாண்டில் தான் அறபியின் முதல் அகராதியான அல்-அய்னியும் முதல் இலக்கணமான அல்-கிதாப்பும் தோன்றின. 

ஒலிகளின் பிறப்பை விளக்கும் ‘பிறப்பியல்’ அல்லது ‘ஒலிப்பியல்’ என்னும் சிறு மொழியியல் கூறின் வழி தொல்காப்பியத்தையும் அல்-கிதாப்பையும் ஒப்பிட்டு ஆய்ந்ததில் கிடைத்த முடிவுகளில் சில வியப்பூட்டுகின்றன. இலக்கண உறவு பற்றிய ஆய்வில் புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கின்றன. இவ்விரு இலக்கணங்களும் தத்தம் வேறுபாடுகளுக்கிடையில் முரண்படும் இடம் ஒன்று உண்டு. ஒப்பிலக்கண ஆய்வில் முக்கியத்துவம் பெறும் அம்முரண்பாடு பற்றி முதலில் பார்ப்போம்.

மாற்றொலி விளக்கத்தில் தொல்காப்பியர், ஸீபவைஹி ஆகிய இருவரின் கருத்துக்களை மூன்று நிலைகளில் (ஒற்றுமை, வேற்றுமை, முரண்) தொகுக்கலாம். முதல் நிலை ஒற்றுமை குறித்தது. மாற்றொலிக்கு அடிப்படை மூலஒலி; ஆயினும் மூலஒலியிலிருந்து வேறுபட்டது மாற்றொலி; ஒலிப்பிடம், ஒலிப்பியல் கூறுகளில் ஆகியவற்றில் மூலஒலியை ஒத்திருந்தாலும் மாற்றொலிக்கு தனி எழுத்துரு கிடையாது முதலிய மாற்றொலிக் கொள்கையில் இருவரும் ஒன்றிணைகிறார்கள். இரண்டாவது நிலை வேற்றுமை பற்றியது. மாற்றொலியை இனம்காணும் முறையில் இருவரும் வேறுபடுகின்றனர். தொல்காப்பியர் குறுகி ஒலிக்கும் ‘இகரம்’, ‘உகரம்’ என்கிறார். தன் இயல்பிலிருந்து தளர்ந்து ஒலிக்கும் [’] (hamza), ஜிய்மு (ج) [j] விலிருந்து சிறிது வேறுபட்டு, காஃபு (ك) [k] போன்று ஒலிக்கும் [ġ] என்னும் முறைகளில் ஸீபவைஹி மாற்றொலியை அடையாளம் காண்கிறார். மூன்றாவது நிலை முரண்பாடு பற்றியது. மூல ஒலியிலிருந்து மாற்றொலியை தனி வகையாகப் பகுக்கும் முறையில் இருவரும் முரண்படுகிறார்கள். தொல்காப்பியர் “சார்ந்துவரல்” (சார்பெழுத்து) என்றும், ஸீபவைஹி “கிளைஒலி”(பிரிவு) என்றும் மாற்றொலியை சுட்டுகின்றனர். மாற்றொலியைக் குறிக்க அவர்கள் கையாளும் சார்ந்து-பிரிந்து என்னும் நேர்முரண் பொருள் கொண்ட கலைச்சொல் பயன்பாடு, இலக்கண ஒப்பாய்வின் புதிய கண்டடைவு. 

இருவேறு மரபுகளின் முதன்மையான முதல் இலக்கணங்களை ஒப்பிடும் போது அவற்றுக்குள் உள்ள வேற்றுமைகளை விட ஒற்றுமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.   தொல்காப்பியமும், அல்-கிதாபும் தோன்றிய இடம், காலம், மொழி, இலக்கணப் பள்ளியின் சிந்தனைமரபு (School of thought) முதலியவற்றில் முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், தத்தம் மொழிக்கு இலக்கணம் செய்யும் போது, சில முக்கியமான விளக்குமுறைகளில் ஒன்றுபடுகின்றன.

அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒற்றுமைக்கூறுகள்: (1) பேச்சொலியை மூலஒலி-மாற்றொலி எனப்பகுத்து, அதே வரிசைமுறையில் ஒலிகளை விளக்குதல்; (2) மூலஒலி-மாற்றொலி என வகைப்படுத்துகையில், ஒவ்வொரு வகையிலும் உள்ள ஒலிகளின் கூட்டுத்தொகையை மறவாமல் குறிப்பிடுதல்; (3) ஒலிப்பிடங்களை தொண்டையிலிருந்து இதழ்வரை முன்னோக்கி/மேல்நோக்கி வரிசைப்படுத்துதல்; (4) பிறப்பியல் விளக்கத்தில் ஒலிகளின் அகர வரிசையை விடுத்து, ஒலிப்பிட வரிசையைப் பின்பற்றுதல்; (5) குரல்வளை மடல்களின் நிலை (Phonation types) பற்றிய விளக்கம்; (6) உயிர்க்கும், மெய்க்கும் உள்ள ஒலிப்பியல் வேறுபாட்டை விரிவாகப் பேசுதல்;  (7) உயிர்களின் பிறப்பை, வாயறை, நாவின்நிலை, இதழ் அமைப்பு ஆகிய மூன்று கூறுகளின் வழி நிறுவுதல்; (8) மெய்யொலி விளக்கத்தில் ஒரே ஒலிப்பிடத்தில் பல்வேறு இன ஒலிகளை சுட்டுதல்; (9) ஒலிப்புமுறையின் போது, ஒலியெழுப்பிகளின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றை இயங்கும் ஒலியெழுப்பி - இயங்கா ஒலியெழுப்பி என இரண்டாகப் பகுத்தல்; (10) ஒலிகளின் ஒலிப்புமுறையை விளக்குகையில், முதலில் இயங்கும் ஒலியெழுப்பியையும், பின்னர் இயங்கா ஒலியெழுப்பியையும் குறிப்பிடும் முறைமை; (11) ஓர் ஒலியை மற்ற ஒலிகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் சிறப்புக்கூறுகளை மட்டும் குறிப்பிடும் சிறப்புக்கூற்றுப்பின்னல் முறையில் (Distinctive feature matrix) ஒலிகளை விளக்குதல்; (12) ஈரிணைத் தொகுப்பு முறையில் (Series of binary contrasts) ஒலிகளை வகைப்படுத்துதல்; (13) முன்னோடிகளின் மொழியியல் சிந்தனையை மேற்கோள் காட்டுதல் முதலியன.

தொல்காப்பியத்திற்கும் அல்-கிதாப்பிற்கும் உள்ள ஒற்றுமைக்கூறுகளில் பெரும்பாலானவை உலக மரபிலக்கணங்களின் பொது விளக்கக்கூறுகளாகவும் திகழ்கின்றன. ‘அஷ்டாத்யாயி’, ‘காதந்திரா’ (சமஸ்கிருதம்), ‘தெக்கனே கிராமத்திகே’ (கிரேக்கம்), ‘டி லிங்குவா லட்டினா’, ‘ஆர்ஸ் கிராமத்திகா’ (லத்தின்), ‘கிதாப் அல்-லுமா’ (ஹீப்ரு), ‘பிராகிருத பிரகாசா’ (பிராகிருதம்), ‘கச்சாயாணா’ (பாலி) முதலிய உலக மரபிலக்கணங்களில் இப்பொது விளக்கக்கூறுகளை பரவலாகக் காணமுடிகிறது.

இனி தொல்காப்பியத்திலும் அல்-கிதாப்பிலும் மட்டும் காணப்படும் மிகச்சில ஒற்றுமைக்கூறுகளைப் பற்றிப் பார்ப்போம்.

1.          ஒலி/பேச்சொலிக்கென தனிக் கலைச்சொல் பயன்படுத்தாமை

2.          ஒலிப்பிட வரிசையில் காற்றறையை இறுதியாகச் சுட்டுதல்

இவ்விரு கூறுகளில் இரு இலக்கணங்களும் ஒன்றுபடுவது வியப்பூட்டுகிறது.

தொல்காப்பியர் ‘எழுத்து’ என்னும் பொதுச்சொல்லால் ஒலியை குறிக்கிறார். அதே போன்று ஸீபவைஹியும் ‘ஹ²ற்ஃப்’ (حرف) என்னும் பொதுச்சொல்லால் ஒலியை குறிக்கிறார். இருவரும் தம் இலக்கணத்திற்குள் அச்சொல்லை பலபொருள்களில் கையாள்கின்றனர். தொல்காப்பியர் ‘எழுத்து’ என்னும் சொல்லை ‘ஒலி’யைக் குறிக்க மட்டுமன்றி, ஒலியன் (Phoneme), ஒலியின் வரிவடிவம் (Grapheme) ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார். அதேபோன்று ஸீபவைஹியும் ‘ஹ²ற்ஃப்’ என்னும் சொல்லை ஒலியைக் குறிக்க மட்டுமன்றி, அசை (Syllable), இடைச்சொல் (Particle), சொல் (Word) ஆகியவற்றையும் குறிக்கும் பொதுச்சொல்லாகப் பயன்படுத்துகிறார். (மூல)ஒலியை பொதுச்சொல்லால் குறிக்கும் இருவருமே மாற்றொலிக்கென தனிக் கலைச்சொல்லை உருவாக்குகின்றனர். தொல்காப்பியர் ‘சார்ந்து வரல்’, ‘எழுத்தோரன்ன’ என்னும் இரு சொற்களால் மாற்றொலியைக் குறிப்பிடுகிறார். ஸீபவைஹி ‘ஃபுறூ’ என்னும் சொல்லால் அழைக்கிறார்.

 ஒலிப்பிட வரிசையில் தொல்காப்பியர் வாயறையில் (Buccal cavity) தோன்றும் ‘ய’ வை இறுதியாகக் குறிப்பிடுகிறார், ஸீபவைஹி மூக்கறையில் (Nasal cavity)  தோன்றும் ‘ن’ [n] வை இறுதியாகச் சுட்டுகிறார். இவ்விரு ஒலிகளும் வாய், மூக்கு ஆகியவற்றின் வழி தோன்றும் காற்றறை (Aircavity/Airchamber) ஒலிகளாகும். எனவே தொல்காப்பியரும், ஸீபவைஹியும் தங்கள் ஒலிப்பிட வரிசையில் இணைத்துக் கூறாமல் இறுதியாகக் குறிப்பிடுகிறார்கள். இருவருமே தொண்டையிலிருந்து இதழ் வரை முன்னோக்கி வரிசைப்படுத்தும் முறையில் (k-t-b)  ஒலிப்பிடங்களைக் குறிப்பிடுகின்றனர். அவர்களின் அந்த வரிசைமுறைக்குப் பொருந்தாமல் நிற்கும் ஒரே ஒலிப்பிடம் காற்றறை. எனவே காற்றறை ஒலியை ஒலிப்பிட வரிசையின் இறுதியில் சுட்டுகின்றனர். இருவரும் அந்த மரபைப் பின்பற்றியிருப்பது வியப்பளிக்கிறது.

ஒலியியல் விளக்குமுறையில் அறபு இலக்கணமரபு சமஸ்கிருத இலக்கணமரபைப் பின்பற்றுகிறது என்று வாதிடும் விவன் லா (Vivien Law)  முதலிய மொழியியலாளர்கள், தங்கள் வாதத்திற்கு ஆதாரமாகச் சுட்டும் அடிப்படையான இரு சான்றுகள், (1) ஒலிப்பிடங்களை குரல்வளையிலிருந்து இதழ் வரை முன்னோக்கி/மேல்நோக்கி வரிசைப்படுத்தும் முறை(k-t-b), (2) ஒலிப்பிட வரிசையில் உயிரையும், மெய்யையும் இணைத்துக் கூறல் ஆகும். இதில், முதல் சான்றான ஒலிப்பிட வரிசை (k-t-b) பொது இந்திய மரபாகும். தொல்காப்பியமும் அந்த முறையில் தான் ஒலிப்பிடங்களை வரிசைப்படுத்துகிறது. ஒலிப்பிட வரிசைமுறையில் தொல்காப்பியத்திற்கும் அல்-கிதாப்பிற்கும் உள்ள அடிப்படை ஒற்றுமையோடு, ‘ஒலியியல்’ என்னும் சிறு கூறின் வழி கண்டடைந்த, வியப்பூட்டும் மேற்கண்ட இரு ஒற்றுமைக்கூறுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, தமிழுக்கும், அறபுக்கும் இலக்கண உறவு இருக்கலாமோ? என்னும் வினா எழுவது இயல்பு. அவ்வினாவை, சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்த இந்தியவியல் அறிஞர் ஆஸ்கோ பர்போலாவின் ஒரு முடிவோடு ஒப்புநோக்குவது பொருத்தமாக இருக்கும். “சிந்துவெளி நாகரிகத்தை முழுமையாக அறிய, சுமேரிய நாகரிகத்தையும், சிந்துவெளி நாகரிகத்தையும் ஒப்புநோக்க வேண்டும். அதற்கு சுமேரிய மொழிக்கு மூலமாக விளங்கும் அக்காடியனும், மூல திராவிட மொழியான தமிழும் நன்கறிந்த ‘இருமொழித் திறவுகோல்’அவசியம்” என்கிறார் பர்போலா.

அவர் குறிப்பிடும் அக்காடியன் மொழி கி.மு.300-100 வரையான காலகட்டத்தில் மத்திய கிழக்கில் வழக்கில் இருந்த மிகப்பழமையான மொழி. இன்றைய ஈராக்கை தோற்றுவாயாகக் கொண்டு, மெசபடோமிய, சுமேரிய நாகரிகங்களில் கல்வி, வாணிபம், வெளியுறவு முதலியவற்றின் பொது மொழியாக விளங்கியதோடு, சுமேரியன், அறபி, ஹீப்ரு முதலிய மொழிகளுக்கு மூல மொழியாகவும் திகழ்ந்தது.  

சிந்துவெளியிலிருந்து மெசபடோமியாவிற்கு எள் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டதால்,  ‘எள்/எள்ளு’ என்னும் தமிழ்ச்சொல் சுமேரியன் மொழியில் ‘இள்ளு’ என்றும், அக்காடியன் மொழியில் ‘எள்ளு’ என்றும் வழங்கப்படுவதை பர்போலா சுட்டிக்காட்டுகிறார். மேலும், ‘மெலுக்ஹ்க்ஹா’ (Meluḫḫa) என்னும் சுமேரியப் பெயர் சிந்துவெளி மக்களைக் குறிக்கும் என்றும், அது ‘மேலகம்’ (mel-akam) என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து தோன்றியது என்றும் பர்போலா முதலிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

தமிழுக்கும், அறபுக்கு மூலமாக விளங்கும் அக்காடியன் மொழிக்கும், சுமேரிய மொழிக்கும் தொடர்பு இருப்பதை அஸ்கோ பர்போலாவின் ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது. அல்-கிதாப்பு தோன்றிய கிபி.எட்டாம் நூற்றாண்டில் பாக்தாத்தை தலைமையகமாகக் கொண்ட அப்பாசைத் பேரரசு (Abbasid Empire) ஈராக் முழுமையும் பரவியிருந்தது. அப்போது ஐரோப்பா, மத்தியகிழக்கு, இந்தியா, சீனா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வணிக வழியின் மையப்பகுதியாக பாக்தாத் திகழ்ந்தது.பாக்தாத்திற்கும் பாஸ்றாவிற்கும் இடையில், யூப்ரடீஸ் நதியின் கரையில் அமைந்துள்ள ‘ஊர்’(Ur) என்னும் நகரம் மெசப்டோமிய நாகரிகத்தில்(கி.மு.4000) முக்கியத்துவம் பெற்றிருந்தது. அக்காலத்தில் இந்த ‘ஊர்’ என்னும் நகரத்திற்கு சிந்துவெளி நாகரிகத்தோடு முக்கிய தொடர்பு இருந்ததை மா.சோ.விக்டர் முதலியோரின் இடப்பெயராய்வுகள் நிறுவுகின்றன. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஈராக்கில் இருந்த மூன்று (பாஸ்றா,கூஃபா,பாக்தாத்) இலக்கணப்பள்ளிகளில் ‘ஊர்’க்கு மிக அருகில் இருந்தது பாஸ்றா இலக்கணப்பள்ளி ஆகும். இப்பள்ளி அறேபியரல்லாத இலக்கணிகளால் புகழ்பெற்றது. பாரசீகத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், அல்-கிதாப்பின் ஆசிரியருமான ஸீபவைஹி இப்பள்ளியைச் சார்ந்தவர் என்பதையும் ஒப்புநோக்க வேண்டும்.       

அறபு மட்டுமன்றி மத்தியகிழக்குப் பகுதியில் வழங்கும் மொழிகளான ஹீப்ரு, பாஸ்கு ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் ஆய்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். செமிடிக் மொழியியலாளர் சைம் ரப்பின் (Chaim Rabbin), மா.சோ.விக்டர் ஆகியோர் கிறிஸ்தவர்களின் வேதமான பைபிளில் உள்ள தமிழ்ச்சொற்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர். அதேபோன்று, பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் அமைந்துள்ள பைரென்னிஸில் (Pyrenness) வழங்கப்படும் பாஸ்கு (Basque) மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை வேர்ச்சொல்லாய்வின் வழி நிறுவுகிறார் பிரெஞ்சு மொழியியலாளர் லஹோவரி (N. Lahovary).

இஸ்லாமின் தோற்றத்திற்குப் பின் தோன்றிய அல்-கிதாப்பை(கி.பி.800), அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்தோடு ஒப்பிடுகையில், இஸ்லாமின் தோற்றத்திற்கு முன்பும், பின்பும், ஈராக்கை உள்ளடக்கிய மத்திய கிழக்குப்பகுதிகள் சிந்துவெளி நாகரிகத்தோடும், தமிழகத்தோடும்  கொண்ட வாணிப, மொழி உறவு குறித்த  வரலாற்றுச்சான்றுகள் முதன்மையானவை. அந்த வகையில் பழந்தமிழ் நாகரிகத்திற்கும், சுமேரிய நாகரிகத்திற்கும் உள்ள உறவிற்கான சான்றுகள் கிடைத்துக்கொண்டிருக்கும் சூழலில், அறபு மொழியின் முதன்மையான இலக்கணமான அல்-கிதாப்பிற்கும், தமிழ் மொழியின் முதன்மையான இலக்கணமான தொல்காப்பியத்திற்கும் உள்ள இவ்வொற்றுமைக் கூறுகளை, தமிழ்-அறபு இலக்கண உறவிற்கான அகச்சான்றுகளாகக் கொள்ளும் காலம் கனிந்துகொண்டிருக்கிறது. 

இந்த  சுட்டியிலும் பார்க்கலாம், https://bookday.co.in/research-articles-tolkappiyam-and-al-kitab-phonological-comparison-t-sundaraj/