வியாழன், 10 டிசம்பர், 2015

காடு : சங்க காலம் முதல் சமகாலம் வரை



மனிதர்களின் மொழிப்பயன்பாட்டில் ஒரு சொல் மரபுவழியாக கொள்ளப்பட்ட ஒரே பொருளில் மட்டும் வழங்கப்படுவதில்லை. இடம், காலம் போன்ற பல சூழல்களும் சாதி,மதம் போன்ற சமூகக் காரணிகளும் ஒரு சொல்லுக்கு பல்வேறு பொருள்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் ‘காடு’ என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் தொல்காப்பியத்தில் ஒரே ஒரு இடத்தில் (மாயோன் மேய காடுறை யுலகமுஞ் - தொல்-பொருள் 952:1) இடம்பெற்றுள்ளது. முதல், கரு, உரி என்னும் முப்பொருளில் முதல் பொருளான நிலம் பற்றிப்பேசும் போது, முல்லை நிலத்தைக் குறிக்க ‘காடு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார் தொல்காப்பியர். அக்காட்டின் தெய்வமான திருமாலை 'மாயோன்' என்று குறிப்பிடுகிறார். எட்டுத்தொகையில் எண்பத்து எட்டு இடங்களிலும், பத்துப்பாட்டில் ஒன்பது இடங்களிலும் ‘காடு’ என்னும் சொல் வருகிறது. பழந்தமிழ் நூல்களில் ‘காடு’ என்னும் சொல் பெரும்பாலும் ‘வனம்’ (Forest/jungle) என்ற பொருளிலே வருகிறது. தமிழில் கானகம், அடவி, புறவு, பொதும்பு முதலிய சொற்களும் காட்டைக் குறிப்பனவாக இருக்கின்றன. பழங்காலம் தொட்டு நம் சமகாலம் வரை காடு என்ற சொல் இலக்கியத்திலும் (ஜெயமோகனின் ‘காடு’) சரி திரைப்படத்திலும் சரி (ஸ்டாலின் ராமலிங்கத்தின் ‘காடு’) அதே பொருளில் தான் அச்சொல் பயின்று வருகிறது. 






 இது பெருவழக்கு அல்லது பொது வழக்கு என்ற நிலையிலேயே அமைகிறது. பெருவழக்கு சமூக மாற்றத்தில் எளிதாக மாறுவதில்லை. ‘காடு’ என்னும் அச்சொல் பெருவழக்காக ஒரு பொருளிலும் சிறு வழக்காக (குறிப்பிட்ட வட்டார வழக்கில்) வேறொரு பொருளிலும் வருகிறது. புஞ்சை நிலத்தை ‘காடு’ என்று தென் மாவட்டங்களில் அழைப்பர். “காட்ல பருத்தி போட்டிருக்கோம், அதுக்கு இன்னிக்கி களை எடுக்கப் போகனும்” என்பது தென்மாவட்ட (நெல்லை,தூத்துக்குடி, விருதுநகர்) வழக்கு. இன்று பேச்சு வழக்கில் இச்சொல் பலவாறு பயன்படுத்தப்படுகிறது.

"ரூபாய் போன காடு தெரியலை"

"ஒரு காட்டுக்குப் போறேன்"

"என்னென்ன காடெல்லாம் போயிவந்திருக்கு"

"காடேமேடேனு அலையாத"

 எனபன போன்ற பல வழக்குகள் காடு பற்றி தென்தமிழகத்தில் உண்டு.  இவ்வாறு ஒரு சொல் காலவோட்டத்தில் பல பரிமாணங்கள் எடுப்பது மொழியின் இயல்புகளில் ஒன்று.    

பெருங்கானகத்தையும் சிறு நிலத்தையும் குறிக்கும் தனிச்சொல்லாக வரும் ‘காடு’ என்னும் சொல் இணைப்புச்சொல்லாக  வருகையில் இன்னும் பல பரிமாணங்களை அடைகிறது. அவை:

வயற்காடு: நெல் விளையக்கூடிய நஞ்சை நிலம்

மேட்டாங்காடு: புஞ்சைக் சாகுபடிக்குரிய மேட்டுப்பாங்கான நிலம்.

வெள்ளக்காடு: நீரால் நிலப்பரப்பு நிறைந்திருத்தல், பெரு வெள்ளம்.

தண்ணிக்காடு: நீரால் நிலப்பரப்பு நிறைந்திருத்தல்.

உழவுக்காடு: உழவுக்கேற்ற நிலம்.

சுடுகாடு: பிணத்தை எரிக்கும்/புதைக்கும் இடம்.                  

அழிஞ்சுக்காடு: பாலைநிலம்

எரங்காடு: பாழ்நிலம்

வேக்காடு: வெப்பம்; பொறாமை.

விழுக்காடு: வீழ்கை – மலைநீர் விழுக்காடு.

                           இவற்றோடு இன்னும் சில வழக்குகளும் உண்டு.

குழந்தைகளின் தொகுதியை 'புள்ளக்காடு' என்று அழைப்பர் (பள்ளிக்க்கூடம் முடிஞ்சு புள்ளக்காடெல்லாம் வீட்டுக்கு போயிடுச்சுக). இவ்வாறு இன்னும் நிறைய சொற்கள் இருக்கின்றன.   

கருத்துகள் இல்லை: