வியாழன், 10 டிசம்பர், 2015

நிலுஃபெர் டெமிர்: ஐரோப்பாவின் மனசாட்சியை உலுக்கியவர்


ஒரு செய்தியை பிறருக்கு உணர்த்த கட்டுரை, கதை போன்ற மொழிசார்ந்த வடிவங்களை விட புகைப்படம் என்னும் மொழிசாரா வடிவம் எளிதானது மட்டுமல்ல தெளிவானதும் கூட. ஆயிரம் வார்த்தைகளின் விவரிக்கவேண்டிய ஒரு கருத்தை ஒரே ஒரு புகைப்படத்தில் சொல்லிவிடலாம். ஒன்றை உணர்வுப்பூர்வமாக உணர்த்துவதும் புகைப்படங்களே. புகைப்படத்தின் மூலம் இப்பூமியில் வாழும் உயிர்களின் சந்தோஷம், துக்கம் போன்ற உணர்வுகளை எளிதாக பிறரோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது. மொழி ரீதியான வேறுபாடுகளையும், தடைகளையும் கடந்து மனிதத்தை ஒன்றிணைக்கும் சக்தியாக புகைப்படம் இருக்கிறது. சமீபத்தில் 2015 செப்டம்பர் இரண்டாம் தேதி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலகமக்களின் மனதை உருக்கியது. துருக்கியின் போட்ரம் கடற்கரையில் அதிகாலைப்பொழுதில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில், மூன்று வயதேயான சிரிய நாட்டுச் சிறுவன் அய்லான் குர்தி குப்புறப்படுத்துத் தூங்குவது போல் உயிரற்ற சடலமாகக் கரையொதுங்கிக் கிடந்தான். இப்புகைப்படம் செப்டம்பர் மூன்றாம் தேதி வியாழக்கிழமை உலக ஊடகங்களின் தலைப்புச்செய்தியாக வந்தது.  

ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் கடந்த பல மாதங்களாக ஐரோப்பாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்விரு நாட்டிலிருந்தும் ஐரோப்பாவிற்கு அகதிகளாகப் போகும் மக்கள் ஐரோப்பாவையும் மத்தியகிழக்கு நாடுகளையும் இணைக்கும் துருக்கி வழியாகத்தான் சென்றாகவேண்டும். துருக்கியிலிருந்து மிக அருகில் உள்ள கோஸ், சமோஸ், ச்லோஸ், லெஸ்வோஸ் ஆகிய கிரேக்கத் தீவுகள் வழியாகத் தான் ஐரோப்பாவிற்குள்  நுழைகின்றனர். இந்த நான்கு தீவுகளும் ஐரோப்பவின் நுழைவு வாயில்களாக உள்ளன. போட்ரமிலிருந்து இரண்டரை மைல் தொலைவில் உள்ள கோஸ் தீவுக்குப்போய் அங்கிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் திட்டத்துடன் கிளம்பிய அய்லான் குர்தியின் குடும்பம் ரப்பர் படகில் பயணித்தது. படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அய்லானின் குடும்பத்தோடு இன்னும் பலரும் பலியாகினர். 
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தால் பெரும்பாதிப்புக்குள்ளான  அப்பாவி மக்கள் அகதிகளாக வெளியேறிக் கொண்டும், சில நாடுகள் இந்த அகதிகளை தன் நாட்டிற்குள் அனுமதிக்காமல் எல்லைகளில் வேலி அமைத்துத் தடுத்துக்கொண்டும் இருந்த சமயத்தில், வெளியாகிய இந்த புகைப்படம் சிரிய மக்களின் துயரத்தையும், இயலாமையையும் உலக மக்களிடம் எடுத்துச் சென்றது. மனித சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கியது. சிரியாவில் நடப்பது உள்நாட்டுக் கலவரம், அதில் நாங்கள் தலையிடமுடியாது என்று கள்ளமௌனம் சாதித்த பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் கல்நெஞ்சத்தைக் கரைத்தது இந்தப் புகைப்படம் தான். இந்தப் புகைப்படத்தைக் கண்டு உலக ஊடகங்களும் மக்களும் சிரிய அகதிகள் குறித்து அக்கறை கொள்ளத்தொடங்கினர். ஊடகங்கள் அகதிகளின் நிலை குறித்து அதிகம் விவாதித்தன. இப்புகைப்படத்தைப் பார்த்து மனசாட்சியுள்ள மனிதகுலம் கொடுத்த அழுத்தத்தால் எல்லையில் போட்டிருந்த வேலிகளைக் கலைந்து சிரிய அகதிகளை இருகரம் நீட்டி அழைத்தது ஐரோப்பா.   
தொடக்கத்தில் இப்புகைப்படத்தை பத்திரிகையில் வெளியிடுவதில் இரு வேறு கருத்துக்கள் நிலவின. சிறுவனின் சுயமரியாதைக்கு கலங்கம் ஏற்படுத்துவதாகவும், அவனது குடும்பத்தின் வேதனையை பொருளீட்டுவதற்கு பயன்படுத்துவதாகவும் அமைந்து விடும் என சில ஊடகங்கள் இந்த புகைப்படத்தை வெளியிடுவதைத் தவிர்த்தன. இந்தப்புகைப்படத்தை வெளியிடுவதன் மூலம் அகதிகளின் அவலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். மேற்கத்திய நாடுகளின் புலம்பெயர்வோர் கொள்கையினால் ஏற்படும் விளைவு இது, மக்கள் இதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிட்டன. 
இருபத்தோராம் நூற்றாண்டில் மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த புகைப்படத்தை எடுத்தவர் 29 வயதான ஓர் இளம் (பெண்) புகைப்பட நிருபர் நிலுஃபெர் டெமிர். துருக்கியைச் சேர்ந்த டோகன் செய்தி நிறுவனத்தின் (DHA- Doğan Haber Ajansı) புகைப்பட நிருபராகப்  பணியாற்றும் நிலுஃபெர் டெமிர், ஈராக், சிரிய அகதிகள் குறித்து புகைப்படம் எடுக்கும் பொறுப்பை கவனித்து வந்தார். குறிப்பாக துருக்கியின் போட்ரம் வழியை ஐரோப்பாவிற்குப் போகும் அகதிகளையும், அவர்களின் நிலையையும் படமெடுத்துக்கொண்டிருந்தார். அப்பணியை மிகுந்த ஈடுபாட்டோடும் பொறுப்புணர்வோடும் செய்துகொண்டிருந்த நிலுஃபெர் டெமிருக்கு செப்டம்பர் இரண்டாம் தேதி அதிகாலையில், போட்ரம் கடற்கரை அருகே இரண்டு படகுகள் கவிழ்ந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக போட்ரம் கடற்கரைக்குச் சென்ற நிலுஃபெர் டெமிர், அங்கு நடந்ததைப் பற்றி அவர் பணியாற்றும் டோகன் (DHA) மற்றும் வைஸ் நியூஸ் (Vice News) ஆகிய செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்.   

டோகன் & வைஸ்: அந்தக் காட்சியை பார்த்தவுடன் உங்கள் மனம் திடுக்கிடவில்லையா,  எப்படி இந்தப் புகைப்படத்தை எடுத்தீர்கள்?
நிலுஃபெர் டெமிர்: அனேகமாக ஒவ்வொரு நாளும் போட்ரம் கடற்கரைக்குச் செல்வேன், அங்கு கடந்த காலங்களில் பல சடலங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் நூற்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களில் பதிவும் செய்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக மூன்று வயதுச் சிறுவனின் சடலத்தைப் பார்த்தது இப்போது தான். அய்லானின் சடலத்தைப் பார்த்த போது என் இரத்தம் உறைந்தது போன்று உணர்ந்தேன். என் பத்திரிக்கை வாழ்க்கையில் அது ஒரு சோகம் நிறைந்த இருண்ட நாள். அகதிகளின் நிலை பற்றி ஒரு பத்திரிக்கையாளராக அங்கிருந்து டோகன்  நிறுவனத்திற்கு தொடர்ந்து செய்தி அளித்து வருகிறேன். எனவே அந்த இடத்தில் நான் ஒரு பத்திரிகைப் புகைப்படக்காரராகவும் கடமையாற்ற வேண்டியிருந்தது.
டோகன் & வைஸ்: போட்ரமில் இது போன்ற நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்கிறதா?  இல்லை, அகதிகள் கடலில் மூழ்குவது அங்கு சாதாரணமாகப் பார்க்கப்படுகிறதா? 
நிலுஃபெர் டெமிர்: ஆம். கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக போட்ரம் கடற்கரையிலிருந்து பல அகதிகளைப் படம் பிடித்து வருகிறேன். அவர்கள் அனைவரும்   போட்ரமுக்கும் கிரேக்கத் தீவான கோஸ்க்கு இடைப்பட்ட இரண்டரை மைல் கடல் பரப்பை இரப்பர் படகின் மூலமே கடந்து சென்றவர்கள். அபாயகரமான இந்தப்பயணத்தில் அய்லனின் விபத்துக்கு முன் பல விபத்துக்கள் நடந்திருக்கின்றன. 
          சிரிய அகதிகள் மட்டும் இந்த அபாயகரமான பயணத்தில் ஈடுபடவில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகள் பலரை நாம் இங்கே காண முடியும். மத்திய கிழக்குப்பகுதியில் ஒவ்வொரு முறையும் போர் நடக்கும் போதெல்லாம் அகதிகளாக்கப்படும் பொதுமக்கள் போட்ரம், கோஸ் வழியாகத்தான் ஐரோப்பாவுக்குச் செல்கிறார்கள். ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைய துருக்கியும், கிரீஸும் தான்  பெரும்பாலான அகதிகளுக்கு  படிக்கட்டுகளாக இருக்கின்றன.  
டோகன் & வைஸ்: நீங்கள் எடுத்த அந்த புகைப்படம் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவியதை எப்படி உணர்கிறீர்கள்?
நிலுஃபெர் டெமிர்: ஒருபக்கம், நான் அந்த புகைப்படத்தை எடுக்காமல் இருந்திருக்கலாம். அய்லானின் பிணத்தை படம் பிடித்ததை விட, அந்தக் கடற்கரையில் விளையாடிய அய்லானை போன்ற இன்னொரு சிறுவனை படமெடுத்திருக்கலாம். அய்லானின் இறப்பு என்னுள் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தி, அன்றைய இரவு முழுவதும் மனதை வருத்தியது. மறுபுறம், இறந்த சிறுவனின் மீது இந்த உலகம் கொண்டிருக்கும் அக்கறையையும், துக்கத்தையும் கண்டு எனக்குள் மகிழ்ச்சி உண்டானது. குறிப்பாக இந்த அகதிகளைலெல்லாம் ஐரோப்பாவில் குடியேற என் புகைப்படம் உதவியிருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷமடைகிறேன். உள்நாட்டுப்போரினால் வெளியேறும் எவரும் இப்படி போகும் வழியிலேயே பிணமாகும் நிலை இனி இருக்காது.   



இந்தப் புகைப்படம் ஐரோப்பாவில் ஏற்படுத்திய தாக்கம்:

1.    பிரிட்டனின் தி இண்டபென்டன்ட்  வலைதளம் அகதிகளை பிரிட்டனுக்கு வரவேற்று வெளியிடப்பட்டிருந்த விண்ணப்பத்திற்கு ஆதரவாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். அதோடு, அகதிகளுக்கு ஆடைகளும் தங்குமிடமும் அளிக்க பலர் முன்வந்தார்கள்.

2.    ரோமில் உள்ள அகதிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்புகள், அகதிகளின் மறுவாழ்விற்கு பொதுமக்களிடமிருந்து 1.6 மில்லியன் டாலர் வசூலித்துக் கொடுத்தது. 

3.    பிரெஞ்சு பிரதமர் மனுவேல் வால்ஸ் ட்விட்டரில், "அவன் பெயர் அய்லான் குர்தி. குடியுரிமைக் கொள்கையில் ஐரோப்பா தன்னைத் தானே மறுபரிசீலனை செய்ய  வேண்டிய இக்கட்டான தருணம் இது" என்று குறிப்பிட்டார். அவர் டுவிட் பண்ணிய ஒரு மணி நேரத்தில், ஐரோப்பாவை நோக்கி குடிபெயர்ந்து வரும் அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய யூனியன் ஆவண செய்ய வேண்டும் என பிரான்ஸும் ஜெர்மனியும் கூறின. அதனை ஐரோப்பிய நாடுகளும் ஏற்றன.

4.    பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் சில ஆயிரம் சிரிய அகதிகளை  பிரிட்டனுக்குள் அனுமதிப்பதாக உறுதி அளித்தார். மேலும், பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த   சிரியா மற்றும் அதன் அருகிலுள்ள நாடுகளுக்கு 219 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாகவும் உறுதி கூறினார்.

5.    ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிகுந்த கருணையோடு லட்சக்கணக்கான சிரிய அகதிகளை தன் நாட்டிற்குள் அனுமதித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துவருகிறது.

6.    இப்புகைப்படத்தின் மூலம் ஐரோப்பிய பத்திரிகைகளின் மனிதாபிமானமும் வெளிப்பட்டது. தி கார்டியன், தி டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் ஐரோப்பிய குடியுரிமைச் சட்டங்களின் மறுபரிசீலனை பற்றி நிறைய விவாதித்தன. இப்புகைப்படம் அரசியல் அளவில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று தி டைம்ஸ் இதழ் குறிப்பிட்டது.  

கருத்துகள் இல்லை: