வெள்ளி, 4 செப்டம்பர், 2015

தமிழகத்தின் முதல் பெண் லாரி டிரைவர்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டம் கள்ளிப்பட்டியில் வசிக்கும் திருமதி. ஜோதிமணி இன்று தமிழ் நாட்டின் ஒரே பெண் லாரி டிரைவர். சிறப்பு மிக்க அந்த பெண்மணியை சந்திப்பதற்காக செவ்வாழைத் தோட்டங்கள் நிறைந்த கள்ளிப்பட்டிக்கு  சென்ற போது, மறுநாள் அகமதாபாத் பயணிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அதற்கிடையில் 'புதியதலைமுறை'க்காக அவர் அளித்த பேட்டி.


"தன் குடும்பத்தில் அப்பா, அண்ணன், கணவர் என அனைவரும் டிரைவர்களாக இருப்பதால் தனக்கு டிரைவர் பணியில் இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டது" என்று கூறும் ஜோதிமணி பத்து நாட்களுக்கு ஒருமுறை பத்து நாள் பயணமாக, கள்ளிப்பட்டியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு ஜவுளி, ஆயத்த ஆடைகள் நிறைந்த சரக்கு லாரியை தனி ஆளாக ஓட்டிச்செல்கிறார்.
2008-இல் தன் கணவர் வைத்திருந்த இரு லாரிகளுக்கு பொறுப்பான டிரைவர் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான தனக்கும் குடும்பப் பொறுப்பும் அதிகரித்ததால், தனது 25 வது வயதில், தானே லாரி ஓட்டுனராகி கணவருக்கு உறுதுணையாக இருக்கலாம் என்று தைரியமாக முடிவெடுத்தார். அதற்காக தன் கணவர் உதவியுடன் லாரி ஓட்டும் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜோதிமணி ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக, தனித்தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கனரக வாகம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றார். ஓட்டுனர் உரிமம் பெற்றவுடன் முதல் பயணமாக ஹைதராபாத்துக்கு சரக்கு லாரியை ஓட்டிச்சென்றார். அதைத் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக அகமதாபாத்தை நோக்கித்தான் தொடர் பயணம்.  தொடக்கத்தில் இரண்டு லாரிகள் இருந்ததால் கணவர் ஒரு லாரியையும், ஜோதிமணி ஒரு லாரியையும் ஓட்டிச்சென்றனர். தற்போது ஒரு லாரி மட்டுமே இருப்பதால் ஜோதிமணி மட்டும் தனியாகவும், சில நேரங்களில் கணவருடனும் அகமதாபத்துக்கு சரக்கு லாரியை ஓட்டிச்செல்கிறார்.
வெளிமாநிலங்களுக்கு லாரியை ஓட்டிச் செல்லும் போது தொடக்கத்தில் கொஞ்சம் அச்சமாக இருந்தது அப்புறம் எளிதாகப் பழகிக்கொண்டேன் என்று கூறும் ஜோதிமணி இதுவரை எவ்வித சிறு விபத்துமின்றி லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் வைத்து ஒருமுறை வேக்கப் ட்யூப் அறுந்து லாரி கட்டுப்பாட்டை இழந்த போது கவனமாகக் கையாண்டு லாரிக்கும் தனக்கும் சேதமின்றி நிறுத்தினார். அதிலிருந்து  தான் நிறைய பாடம் கற்றதாகக் கூறுகின்றார். லாரியில் இங்கிருந்து அகமதாபாத் போக நான்கு நாள், திரும்பி வர நான்கு நாள், சரக்குகளை ஏற்ற, இறக்க இரண்டு நாள் என மொத்தம் பத்து நாட்கள் ஆகின்றன ஒரு ட்ரிப்க்கு. அந்த பத்து நாட்களும் உணவு, தட்பவெப்பம் என எத்தனையோ இடர்பாடுகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மிகுந்த மன வலிமையோடு எதிர்கொள்கிறார். பத்து நாள் பயணம் முடித்து வீட்டி பத்து நாள் ஓய்வு அப்புறம் மீண்டும் பத்து நாள் பயணம் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இப்பயணக் காலங்களில் தன் இரு குழந்தைகளையும் தன்னுடன் இருக்கும் அம்மாயி சரஸ்வதி தான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறார். பத்து வயதுடைய தன் மகனையும், ஏழு வயதுடைய தன் மகளையும் இப்பயணத்தால் அடிக்கடி பிரிய நேரும் போது தன் மனசு (தாய் மனசு) மிகவும் கஷ்டப்படுகிறது. அதுமட்டுமன்றி சொந்த பந்தங்களின் வீட்டு விஷேஷத்திலும் அதிகமாகக் கலந்து கொள்ள முடிவதில்லை என்றார் ஜோதிமணி.
     பல மாநிலங்களுக்கிடையில் நடக்கும் பயணம் என்பதால் தமிழ் மட்டுமன்றி இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளையும் அடிப்படையில் கற்றிருக்கிறார். தன் திருமணத்திற்கு முன்பே ஹிந்தி படிக்கத் தொடங்கினார். அதோடு ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகள் மூலம் ஆங்கிலத்தையும் கற்றிருக்கிறார். அதனால் ஆந்திரா தாண்டி மகாராஷ்ட்ரா, குஜராத் மாநிலங்களில் பயணிக்கும் போது மொழிப்பிரச்சினைகள் ஏதுமின்றி எளிதாக பயணிக்கிறார்.  
            தான் லாரி டிரைவராக இயங்குவதை தொடக்கத்தில் உறவுகளும், ஊராரும் கேலியாகத்தான் பார்த்தார்கள். ஆனால் எனது தன்னம்பிக்கையாலும் மனவலிமையாலும் அவற்றையெல்லாம் தைரியமாக எதிர்கொண்டு எளிதில் கடந்து வந்துவிட்டேன். இன்று அவர்களின்(சமூகம்) பார்வை மாறியிருக்கிறது. இன்று என்னை வெளியிடங்களில் வைத்துப் பார்க்கும் சுற்றுவட்டாரத்து மக்கள் பெருமையாகப் பேசுவதோடு, தைரியமான பெண் என்று உற்சாகப்படுத்துகிறார்கள்.
16-6-2015 அன்று தனது முப்பத்தோராவது பிறந்த நாளைக் கொண்டாடும் ஜோதிமணி வெறும் லாரி டிரைவர் மட்டுமல்ல. கார், கியர் பைக் என சிறிய ரக வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் பெற்று, வெளிமாநில ட்ரிப் இல்லாத ஓய்வு நேரங்களில் சிறியரக வாகனங்களை ஓட்டி அசத்தும் வாகனப் பிரியராகவும் திகழ்கிறார்.
தங்களின் இந்தப்பணிக்கு கணவரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது? என்று கேட்டவுடன் மிகவும் உற்சாகமாயினார். "எனக்கு எல்லாமே அவரு தானுங்க, எல்லாத்தையும் விட அவுங்க (கணவர்) கொடுக்கும் ஊக்கம் தானுங்க என்னை இந்த அளவிற்கு செயல்பட வச்சுது" என்று தனது கணவர் கௌதம் பற்றி பெருமையாகக் கூறுகிறார். எல்லாப் பிரச்சினைகளிலும் என்னுடன் இருந்து அவர் தாங்கிக்கொள்வதால், எனது முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்தையும் எளிதில் கடக்க முடிந்தது.   
  ஜோதிமணியின் கணவர் கௌதமன் பேசும் போது, எங்களுக்கென்று இருந்த வயலை விற்றுத்தான் இந்த லாரி தொழிலுக்கு வந்தேன். இந்தத் தொழிலில் டிரைவர் அமைவது தான் பெரிய வரம். நல்ல டிரைவர் அமையவில்லையென்றால் நஷ்டம் தான் மிஞ்சும். பொறுப்பான டிரைவர் கிடைக்காமல் தான் கடந்த ஆறு வருடத்தில் மட்டும் பத்து லாரிகள் மாற்றியிருக்கிறேன். அத்தனையும் பழைய வண்டிகள் தான். ஒரு வண்டியை வாங்குவோம் கொஞ்சநாளில் டிரைவர்கள் ஏதாவது பெரிய சேதத்தை ஏற்படுத்துவார்கள், அப்புறம் அதை விற்று விட்டு கொஞ்சம் நல்ல நிலையில் உள்ள வணடியை வாங்குவோம். இப்படியே சுழற்சி முறையில் தான் இந்த தொழிலை செய்துகொண்டிருக்கிறோம். இதனால் வண்டிச்சேதத்தினால் ஏற்படும் நஷ்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் குடிக்காமல் பொறுப்போடு வேலை செய்யும் வாடைகை டிரைவர்கள் கிடைப்பதில்லை. சிலர் ரெண்டு நாள் மூன்று நாள் வந்துவிட்டு திடீரென நின்று விடுவார்கள். சிலர் வண்டிக்கு நிறைய செலவை இழுத்து வைத்துவிடுவார்கள். அப்புறம் லாரி உரிமையாளருக்கு நஷ்டம் தான் வரும். அதனால் தான் நாங்களே டிரைவர்களாக மாறவேண்டிய சூழ்நிலை வந்தது. ஜோதிமணியும் இந்த சூழலில் தான் எங்கள் குடும்பப்பொறுப்பை ஏற்பது போல் டிரைவர் பொறுப்பை தைரியமாக ஏற்றார் என்று தன் தொழிலின் நிலவரத்தை விவரித்தார்.
அகமதாபாத்திற்கு ஒருமுறை சரக்குகளை ஏற்றிக்கொண்டு போய் வந்தால் பத்தாயிரம் வரை ஊதியம் கிடைக்கும். அதில் அனைத்துச்செலவும் போக ஏழாயிரம் கைக்கு கிடைக்கும். அந்த வருமானத்தில் தான் தன் குடும்பம் ஓடுகிறது என்று கூறும் ஜோதிமணிக்கு பிற சொத்துகள் ஏதுமில்லை. லாரி ஒன்றே அவரது சொத்தாக இருக்கிறது. நூற்றுக்கு 2.50 காசு வட்டிக்கு பைனான்ஸில் பணம் எடுத்துத் தான் இந்த லாரியையும் வாங்கியிருக்கிறார். அதற்கு இன்னும் ட்யூ கட்டிக்கொண்டிருக்கிறார். தன் வருமானத்தில் பெரும்பகுதி ட்யூ கட்டுவதற்கே போய்விடுவதால் மிகச் சொற்பமான வருமானத்தில் தன் இரு குழந்தைகளை படிக்க வைக்கின்றார். பிற சொத்துகள் ஏதும் இல்லாததால் வங்கிகளும் கடன் தர மறுக்கின்றன. பெண்களுக்கான அரசு உதவி கூட ஏதும் கிடைக்கவில்லை. சிறு தொழில் செய்வதற்கு வங்கிகள் அளிக்கும் கடன் உதவி எங்களுக்குக் கிடைக்க ஆவணம் செய்தால் எங்கள் வாழ்க்கைத்தரம் கொஞ்சம் மேம்படும் என்று அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்த வீரமங்கையின் குடும்பம். ஒரு பெண் டிரைவரின் வாழ்வு ஒரு பெண் முதல்வரால் ஒளிருமா? ஜோதிமணியை வாழ்த்த – 9488988828. 

கருத்துகள் இல்லை: