ஞாயிறு, 7 ஜூன், 2015

இலக்கணமும் தலக்கனமும்,


கி.பி.எட்டாம் நூற்றாண்டில் ஈராக்கின் பஸறா (பஸறஹ்) ஒரு இஸ்லாமியக் கல்வி மையமாக விளங்கியதால், அறபியரல்லாத பிற நாட்டு இஸ்லாமியரும் அங்குக் குடிபெயர்ந்தனர்.  அறபு மொழியின் முதல் இலக்கணியான ஸீபவைய்ஹிக்கு பத்து வயதாகும் போது அவரது குடும்பம் ஈரானின் பய்தாவிலிருந்து வடமேற்கில் 470 கி.மீ தொலைவிலுள்ள ஈராக்கின் பஸறா (بصرة/Basra) நகருக்குக் குடிபெயர்ந்தது. அறபியரல்லாத பாரசீகரான ஸீபவைய்ஹி பஸறாவில் முதலில் இஸ்லாமிய மார்க்கச்சட்டங்களை படிக்க எண்ணினார். அதற்காக அப்போது பஸறாவில் மார்க்க அறிஞராக விளங்கிய ஹமாத் பின் ஸலாமஹ் பின் தினாற் அல் பஸ்றிய் (d.167/784) (حماد بن سلمة بن دينار البصري‎/ Hammad ibn Salamah ibn Dinar al-Basri) யிடம் மார்க்கம் பயிலும் மாணவராகச் சேர்ந்தார். மார்க்கச்சட்டங்களைப் பயின்று கொண்டிருந்த போது ஒருநாள், ஹமாத் பின் ஸலாமஹ் (ஆசிரியர்) பின் வரும் ஹதீத்தை  ஸீபவைஹிக்கு ஓதக் கற்றுக்கொடுத்த போது,
 “mā min  ahadin min ashabi illa man situ la ahadtu alayhi laysa abā l dardāi”
   (There is no one among my companions that I would not take exception to if I wanted to, but not Abu l-Darda),
ஹதீதில் வரும் லய்ஸ அபா (laysa abā) என்பதை, லய்ஸ அபூ (laysa abū) என ஸீபவைஹி தவறுதலாக உச்சரித்துவிட்டார். உடனே ஹமாத் பின் ஸலாமஹ் கோபமுற்று ஸீபவைஹியை கடுமையான சொற்கள் வழி திருத்தினார். அது ஸீபவைஹிக்கு பெரும்சங்கடத்தை ஏற்படுத்தியது. பெரும் சங்கடம் என்றால், மார்க்கச்சட்டம் படிக்கும் எண்ணத்தையைக் கைவிடுமளவிற்கு. அதாவது அறபியரால் தான் அறபு மொழியைத் துல்லியமாக உச்சரிக்க முடியும், பிறரால் இயலாது என்னும் அறேபிய கர்வம். அது ஸீபவைஹிக்கு பெரும் ஆதங்கத்தை உருவாக்கியது.ஆ/ஊ என்னும் உச்சரிப்புப் பிழையை நீக்க, உடனே அறபு இலக்கணம் கற்ற வேண்டும் என பெருவிருப்பம் கொண்டார். தான் ஒரு பாரசீகர் என்பதால் தான் அறபு இலக்கணத்தில் தவறிழைத்தோம் என்று எண்ணினார். ஆனால் அதைவிட நம்மாலும் அறபியை துல்லியமாக உச்சரிக்க முடியும் என்று நம்பினார். ஹமாத் பின் ஸலாமஹின் கடுமையான வார்த்தைகளில் அறபி-பாரசீகர் இனப்பாகுபாடு ஒளிந்திருப்பதை எளிதில் இனம் கண்ட ஸீபவைஹி, முதலில் அறபு இலக்கணத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என முடிவு செய்து, அப்போது அறபு மொழி அறிஞராக இருந்த அபு அப்த் அற்-றஹ்மன் அல்-க்ஹலீல் இப்ன் அஹ்மத் அல்-ஃபறாஹிதியிடம் (d.175/791)(أبو عبد الرحمن الخليل بن أحمد الفراهيدي/Abu 'Abd Ar-Rahman al-Khalīl ibn Ahmad al-Farahidi) மொழி மாணவனாகச் சேர்ந்தார். பின்னாளில் அல்-ஹலீலுக்கும் ஸீபவைஹிக்குமான உறவு ஆழமானதாகவும் நீண்டதாகவும் இருந்தது. அல்-ஹலீலின் மறைவிற்குப் பின் பாரசீகரான ஸீபவைஹி எழுதிய அல்-கிதாபு (கி.பி.796) தான் இன்று அறபு மொழியின் முதல் இலக்கண நூல். தமிழின் தொல்காப்பியம் போல அல்-கிதாப்பிற்கு நிகரான நூல் அறபியில் இல்லை. அல்-கிதாபு போன்று அறபு ஒலிகளின் உச்சரிப்பை ஆழமாகவும் விரிவாகவும் விவரிக்கும் நூல் அறபு இலக்கண மரபில் வேறில்லை. கி.பி.800 க்குப் பின் தோன்றிய பெரும்பாலான அறபு இலக்கணங்களில் அல்-கிதாப்பின் தாக்கம் தொடர்ந்தது.       

கருத்துகள் இல்லை: