ஞாயிறு, 7 ஜூன், 2015

தோப்புகளை உருவாக்கிய தனிமரம்



 ‘பசுமை நண்பன்’ என்றாலே இராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு பெரியவர் தான் ஞாபகத்திற்கு வருகிறார். கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக இராஜபாளையத்திலும் அதனைச்சுற்றியுள்ள பல கிராமங்களிலும் ஏறத்தாழ ஐயாயிரம் மரங்களுக்கு மேல் நட்டு, வளர்த்து, பாதுகாத்துவரும் பெரியவர் ‘பசுமை நண்பன்’ என்னும் இரா. கருப்பையா. இந்த ‘பசுமை நண்பனை’ சந்திக்கப்  போகும் போது கூட இராஜபாளையத்தில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. இராஜபாளையத்திலிருந்து தெற்கில் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நக்கனேரி கிராமம் தான் ‘பசுமை நண்பன்’ கருப்பையாவின் சொந்த ஊர். இந்தக் கிராமத்தில் இருந்துகொண்டு சுற்று வட்டாரங்களில் எல்லாம் பசுமை வலையை விரித்துக்கொண்டிருக்கிறார். 
  மரம் வளர்க்கும் ஆர்வம் எப்படி வந்தது? என்று வினவிய போது, ஆர்வமாக தன் கதையைத் தொடர்ந்தார். “விறகுவெட்டியாக (“மரவெட்டியாக அல்ல” என்று அழுத்தமாகச் சொல்கிறார்) விறகுக்கடையில் பல ஆண்டுகளாக வேலை செய்து என் ஒரே மகனை படிக்கவைத்து ஆசிரியராக்கினேன். அவர் ஆசிரியரானதும் என்னை வீட்டில் ஓய்வெடுக்கும் படி கூறினார். என் மனைவியோ, ரெண்டு ஆட்டுக்குட்டியைப் பிடிப்பா, நம்ம பாட்டுக்கு மேய்ச்சிட்டு வீட்லயே இருக்கலாம் என்றார். ஆனால் எனக்கு அப்படி எதுவும் செய்யத் தோனல. மகன் அனுப்புற பணத்தில சாப்பிட்டுட்டு சும்மாவே ஒரு இருபத்தஞ்சு நாள் இருந்தேன். அதுக்கு மேல என்னால் இருக்க முடியல, அன்னை தெரசா போன்றவர்களின் பொது சேவையைப் பற்றி நிறையா கேள்விபட்டிருக்கிறேன். நாமும் அப்படி இந்த நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், மரம் வளர்க்கும் யோசனை வந்தது. உடனே சில மரக்கன்னுகளை வாங்கிவந்து, எங்க கிராமத்து ரோட்டு ஓரங்களில் நட ஆரம்பிச்சேன்” என்று தன் தொடக்ககால மரம் வளர்ப்பைப் பற்றிக் கூறும் கருப்பையா தாத்தா, மரம் நடும் பொதுச்சேவையை தனது அறுபத்து ஐந்தாவது வயதில் தொடங்கியிருக்கிறார். அவரது இந்த நாட்டு நலப்பணிக்கு, வீடுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. மனைவி சரியாக சமைப்பதில்லை, “அனுப்பும் பணத்தை நிறுத்தி விடுவேன்” என்னும் மகனின் பொய் மிரட்டல். இப்படி ஒரு பக்கம் வீட்டுக்குள்ளும், இன்னொரு பக்கம் ஊருக்குள்ளும் எதிர்ப்புக் கிளம்பியது. ஊருக்குள் தெருவழியே நடந்து போகும் போது, சாவடியில் வீணாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் பெரிசுகள் எல்லாம் கருப்பையா தாத்தாவைப் பார்த்து, “கிருக்கன் போறான், அமைதியா மகன் அனுப்புற பணத்தில தின்னுட்டு வீட்டில கிடப்பானா, மெனக்கெட்ட வேலை செஞ்சிட்டுத் திரிறான்” என்று சத்தமாகவே வசைபாடினர். ஆனால் கருப்பையா தாத்தாவோ, இவ்வகை ஏச்சுக்களையும், எதிர்ப்புகளையும் ரணமாக மனதில் வைக்காமல், உரமாக மரங்களுக்கு வைத்தார். அதனால் தான் இன்று ஆயிரக்கணக்கான மரங்கள் அவருக்குத் துணையாய் நிற்கின்றன.
கரியமில வாயுவை அதிகம் வெளியிடும் கருவிகளின் (வாகனம்,குண்டு பல்பு போன்றவை)  பயன்பாட்டைக் குறைத்து, பூமியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று, சூழலியல் அறிஞர்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருந்த புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில் தான் கருப்பையா தாத்தா மரம் வளர்ப்பில் ஆர்வமாக இறங்கினார். 2002–இல் முதன்முதலாக மகன் அனுப்பும் பணத்தில் மிச்சம் பண்ணி ஐநூறு ரூபாய்க்கு மரக்கன்றுகளை வாங்கி தன் ஊரின் பொது இடங்களில் நட்டு வளர்க்க ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு மாதமும் முன்னூறு ரூபாய் ஒதுக்கி, மரக்கன்றுகள் வாங்குவதற்கும், நட்ட மரங்களைப் பராமரிப்பதற்கும் செலவிடுகிறார். இராஜபாளையம் வட்டாரத்தில் மட்டுமன்றி சில வெளியூர்களுக்கும் சென்று மரக்கன்றுகளை நடுகிறார். இதுவரை ஐந்தாயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதாகக் கூறும் கருப்பையா தாத்தா பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாகவும் அளித்து வருகிறார். பொது மக்கள் தங்கள் வீட்டு வாசலிலும், சொந்த நிலங்களிலும் மரங்களை நட்டு இயற்கை வளத்தைப் பெருக்க்கவேண்டும் என்னும் நோக்கில் தன் சொந்தச்செலவிலும், நன்கொடையாகவும் வாங்கிய இரண்டாயிரத்து ஐநூறு கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக அளித்திருக்கிறார்.
இராஜபாளையம் பெரிய ஆஸ்பத்திரி (அரசு மருத்துவமனை), பேருந்து நிலையம், இராஜபாளையத்திலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்குப் பிரிந்து செல்லும் சாலைகள், கிராமங்களில் உள்ள கோவில், சாவடி, பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் தன்னிச்சையாகவும், சிலரின் அழைப்பின் பேரில் சென்று மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். தனது நக்கனேரி கிராமத்தில் மட்டும் ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டிருக்கிறார். அயன் கொல்லங்கொண்டான், ஜமின் கொல்லங்கொண்டான், தெற்கு வெங்காநல்லூர் போன்ற சுற்றுப்புற கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் மட்டுமன்றி தனி நபர்கள் அழைத்தாலும் உடனே மரக்கன்றுகளுடன் போய் இறங்கிவிடுவார். தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் ஏராளமான மரக்கன்றுகளை அவர்களின் அனுமதியோடு நட்டிருக்கிறார். இவரின் சேவையைக் கண்டு மதுரை, புதுச்சேரி போன்ற இடங்களிலிருந்தும் அழைப்பு வந்திருக்கிறது. வெளியூர்களில் இடத்தை மட்டும் காண்பித்தால் போதும், அங்கு இவரே மரக்கன்றுகளை இலவசமாகக் நட்டுவைத்து, அவற்றைப் பராமரிக்கும் முறைகளையும் சொல்லிக்கொடுக்கிறார்.
இவரது மரம் வளர்ப்பில் இன்னொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. நம் மண்ணின் மரபு சார்ந்த மரங்களையே நடுகிறார், பிறருக்கும் பரிந்துரைக்கிறார். ஆல், அரசு, மருதம், வாகை, புங்கை, நவ்வா, வேம்பு, பூசனம், பூவரசு போன்ற நம் மண்ணின் பாரம்பரிய வித்துக்களையை நடுகிறார். ஆத்தோரத்திலும், குளக்கரையிலும் ஒய்யாரமாய் வளர்ந்திருந்த பாரம்பரிய மரங்களை, கடந்த காலங்களில் விறகுக்காகவும் வேறுபல தேவைகளுக்காகவும் வேரறுத்துவிட்டு, இன்று கருவேலையிலும் வேலிக்காத்தானிலும் நிழல் தேடுகிறோம். தமிழ் இலக்கியத்தில் காணும் நம் பாரம்பரிய மரங்களை இந்த விறகுவெட்டி இப்போது மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருக்கிறார்.
கன்றுகளை நடுவதோடு மட்டும் நின்றுவிடாமல், “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்” என்னும் பழமொழிக்கு ஏற்ப, கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல், களை வெட்டுதல், நோய் தாக்காமல் பாதுகாத்தல் என தன் பிள்ளைகளைப் போல், மரக்கன்றுகளை கவனமாகப் பார்த்துக்கொள்கிறார். பங்குனி,சித்திரை,வைகாசி போன்ற வறட்சிக்காலத்தில் கண்மாய், குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்து குடங்களில் தண்ணீர்  எடுத்துவந்து கன்றுகளுக்கு ஊற்றுகிறார். மிகவும் வறட்சியான பஞ்சக் காலங்களில் (கடந்த நான்கு ஆண்டுகளாக இராஜாபாளையம் வட்டாரமே வறட்சியில் இருக்கிறது), தண்ணீரை விலைக்கு வாங்கி, தண்ணி வண்டிகளில் கொண்டுவந்து கன்றுகளுக்கு ஊற்றி வளர்க்கிறார். இவற்றிற்கெல்லாம் பணச்செலவு, உடல் உழைப்பு என எல்லாவற்றையும் தானே சுமந்தாலும், சில நேரங்களில் தனி நபர்களும் பண உதவி செய்வது, தனக்கு ஊக்கமாக இருப்பதாகக் கூறுகிறார்.
மரம் வளர்ப்பில் கருப்பையா தாத்தாவின் சாதனையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கின்றன. மாநில முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தற்போதைய இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் போன்ற அரசு நிர்வாகத்தினர் விழாக்களில் விருது (கேடயம்,சான்றிதழ்) வழங்குவதோடு மட்டும் நின்று விடுகிறார்கள். அரசுத்தரப்பிலிருந்து ஊக்கமோ, உதவியோ தனக்குக் கிடைக்கவில்லை என தனது மனஸ்தாபத்தையும் தெரிவித்தார்.  2009 –இல் இவரது பணியைக் கண்டு ஒரு தள்ளுவண்டி மட்டுமே கொடுத்திருக்கிறது தமிழக வனத்துறை. அது தனது பணிக்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும், ஆனால் அந்த வண்டி தற்போது பழுதடைந்து கிடப்பாதாகவும் வருத்தப்படுகிறார். தனக்கு அரசு உதவி செய்தால், இப்பணியை இன்னும் ஊக்கத்தோடு பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த முடியும் என்று நம்புகிறார். கருப்பையா தாத்தா போன்ற தன்னார்வலர்களை ஒதுக்கிவிட்டு, பூமியின் வெப்பத்தைக் குறைத்து இயற்கை வளங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளில், வெறுமனே கோடிகளைக் கொட்டி உருவாக்கப்பட்ட நிறுவனங்களை மட்டும் நம்பிக்கொண்டிருப்பது, இப்பூமிக்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதை அரசும், இயற்கை ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும்.
மழைக்குக் கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத கருப்பையா தாத்தாவிற்கு இருக்கும் இயற்கை பற்றிய நுண்ணறிவு வியப்பளிக்கிறது. மரங்களால் இந்த பூமிக்கும், மனித குலத்திற்கும் கிடைக்கும் நன்மைகள், சூழலியல் மாற்றம் முதலியவற்றை அறிவியல்பூர்வமாக அறிந்திருக்கிறார். இயற்கை குறித்து தனக்கு இருக்கும் அறிவை, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் வழியும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறார். அதோடு, இன்று சமூகச்சீரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கும் மதுவிற்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார். மது அருந்தியவர்களை தன் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் தன் மனைவியை இழந்த இந்த எழுபத்தேழு வயது இளைஞர் தற்போது தனியாக வாழ்கிறார். இந்தத் தனிமரம் தான் பெருந்தோப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. புதிய தலைமுறையுடன் பேசிமுடித்ததும் ஒன்பது மணிக்கெல்லாம் இராஜபாளையத்தில் இருக்கனும் என்று அவசரமாகக் கிளம்பினார். இராஜபாளையம் பெரிய ஆஸ்பத்திரியில் நூற்று இருபது மரக்கன்றுகள் நட்டிருக்கிறேன், அவற்றைப் பராமரிப்பது தான் தற்போது எனது அன்றாடப் பணியாக இருக்கிறது என்கிறார். இன்னும் எத்தனை வருஷத்துக்கு ஆண்டவன் என்னை உயிருடன் வைத்திருக்கிறானோ அதுவரை மரங்களை நட்டு இந்தப் பூமியைப் பசுமையாக்குவேன் என்று கூறிக்கொண்டே எழுபத்தேழு வயதிலும் இருபத்தேழு வயது இளைஞனைப்போல் தோளில் மண்வெட்டி, கையில் கம்பு என கம்பீரமாக கிளம்புகிறார். 9488212911 என்ற எண்ணிலும் பசுமை உண்டு.

 இக்கட்டுரை 08-01-2015 தேதியிட்ட புதிய தலைமுறை இதழில் வெளியானது.

கருத்துகள் இல்லை: