ஞாயிறு, 7 ஜூன், 2015

தலைவர்களின் மொழி





 

ஏஞ்சலா மெர்கெல் (Angela Merkel), ஜெர்மன் அதிபர்: வேதியியல் அறிஞரான மெர்கெல் ஜெர்மனியின் முதல் பெண் அதிபர். தாய் மொழி ஜெர்மன். பள்ளியில் படிக்கும் போதே ரஷ்யனிலும் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார். தனது ரஷ்ய மொழிப்புலமைக்குப் பரிசாக  இளம்வயதிலே மாஸ்கோவை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பைப் பெற்றார். ரஸ்ய அதிபர் புதினுடன் மிக இயல்பாக ரஷ்ய மொழியில் தொடர்பு கொள்கிறார். ஜெர்மனியில் அவரது உரைகள், உரையாடல்கள் முழுக்க முழுக்க ஜெர்மன் மொழியில் இருக்கும். மெர்கெல் பொதுவிடங்களில் ஆங்கிலத்தில் உரையாற்றுவது அரிது.கடந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆங்கில உரை குறிப்பிடத்தக்கது. மெர்கெல் பேசும் மொழியை விட அவரது உடல் மொழி (body language) ஜெர்மன் மக்களிடையே பிரபலம். கைகளின் விரல்களை இதய வடிவில்/நாற்கர வடிவில் இணைக்கும் சைகை 'மெர்க்கெல் நாற்கரம்' (Merkel Raute / Merkel rhombus) என்று ஜெர்மன் மக்களிடம் முத்திரை பதித்துள்ளது. 


 
ஃபிரான்ஸொய்ஸ் ஹோல்லன்டி(François Hollande), பிரான்ஸ் அதிபர்: பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமையுடையவர். "நான் ஒரு பிரெஞ்சுக்காரரைப் போன்று தான் ஆங்கிலம் பேசுவேன்" என்று தன்னுடைய ஆங்கில உச்சரிப்பைக் குறிப்பிடுவார். இவரது ஆங்கிலப்புலமை முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை விட சிறப்பாக இருந்தாலும், பிரான்ஸ் கடைபிடித்துவரும் "பிரெஞ்சு அதிபர் பிரெஞ்சு மொழியில் தான் பேச வேண்டும்" என்பதில் உறுதியாக இருக்கிறார். 2012 இல் ஓபாமாவுடனான சந்திப்பில், மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் முழு உரையாடலையும் பிரெஞ்சில் தான் நிகழ்த்தினார். இறுதியில் ஒரு நகைச்சுவை துணுக்கை மட்டும் ஆங்கிலத்தில் கூறினார். அப்போது ஓபாமாவின் முகம் மிகவும் பிரகாசமானதுமதே போன்று அமெரிக்க தேர்தலில் இரண்டாவது முறையாக வென்ற ஓபாமவிற்கு 2012இல் அனுப்பிய வாழ்த்து மடல் முழுமையாக பிரெஞ்சு மொழியில் தான் இருந்தது. ஆனால் இறுதியில் friendly என்றே ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்து இட்டார். 

 

டேவிட் கேமரூன் (David Cameron), இங்கிலாந்து பிரதமர்: டச்சு, ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் உரையாடும் ஆற்றல் பெற்றவர். இவரது தாய் டச்சு மொழி பேசுபவர், மனைவி ஸ்பானிஷ் மொழி பேசுபவர். எதிர்காலத்தில்  பன்னாட்டு உறவுகளுக்கும், வாணிபத்திற்கும் பன்மொழிப்புலமை அவசியம் என இளைய தலைமுறைகளிடன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். "ஒருவருடன் (ஏதோ) ஒரு மொழியில் பேசும்போது நீங்கள் சொல்லும் கருத்து அவரது மூளைக்குச் செல்கிறது, ஆனால் அதை அவரது (தாய்) மொழியில் சொல்லும்போது அக்கருத்து அவரது இதயத்திற்குப் போகிறது" என்னும் நெல்சன் மண்டேலாவின்  மொழிச்சிந்தனையோடு ஒன்றிணைந்தவர்.  

 
விளாடிமிர் புடின் (Влади́мир Пу́тин), ரஸ்ய அதிபர்: ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரையாடுவார். பொது அரங்கில் அதிகமாக ஆங்கிலம் பேசுவதில்லை. ரஷ்யனிலும் ஜெர்மனிலும் புலமையுண்டு. ரஷ்ய மொழியில் சிறந்த பேச்சாளர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலும் புடினும் சந்திக்கும் போது இருவரும் ஜெர்மனிலும், ரஷ்யனிலும் மறிமாறி உரையாடுவார்கள்.  

 
நரேந்திர மோடி (નરેંદ્ર મોદી), இந்திய பிரதமர்: தாய்மொழி குஜராத்தி. குஜராத்தி, இந்தி, ஆங்கிலத்திலும் உரையாடுவார். இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்திர ராஜபக்‌ஷேவுடனான சந்திப்பில், ராஜபக்‌ஷே ஆங்கிலத்தில் பேச, மோடி முழுக்கமுழுக்க இந்தியில் தான் பேசினார். ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர் யாரையும் பயன்படுத்தவில்லை. ஆனால் மோடியின் இந்தி உரையாடல் ராஜபக்க்ஷேவுக்கு உரைபெயர்ப்பாளர்/ மொழிபெயர்ப்பாளர் (interpreter) மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. புதுதில்லியில் அரசு அதிகாரிகளுடன் உரையாடும் போது தேவைப்பட்டால் மட்டுமே உரைபெயர்ப்பாளரை பயன்படுத்துவார். இந்தி அளவிற்கு ஆங்கிலத்தில் புலமை இல்லாததும், தேசிய மொழியைப் நாம் தான் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணமுமே அதற்கு அடிப்படை என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் நரேந்திரமோடி உலகத்தலைவர்கள் வரிசையில் சேர்ந்த பின்னும் தலைவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து இந்தியிலேயே பேசுவதற்குக் காரணம், இந்து தேசியவாதிகளின் மொழி உணர்வு புண்படாமல் காப்பதேயாகும் என அமெரிக்க பத்திரிக்கையான 'தி வாஷிங்டன் போஸ்ட்' (05-06-2014) விமர்சித்தது.

 

பராக் ஓபாமா (Barack Obama), அமெரிக்க அதிபர்: தன் தாய் மொழியான ஆங்கிலத்தில் தான் எல்லா உரையாடலையும் அமைத்துக்கொள்கிறார். உலகத்தலைவர்கள் அனைவருடனும் ஆங்கிலத்தில் தான் தொடர்பு கொள்கிறார். தன் சிறுவயதில் இந்தோனேசியாவில் சிறிது காலம் இருந்ததனால் இந்தோனேஷிய மொழியில் சில வார்த்தைகளையும், சில இந்தோனேஷிய உணவின் பெயர்களை இன்றும் நினைவில் வைத்திருக்கிறார். 2014 இல் இந்தோனேஷிய அதிபருடன் சிறுசிறு வாக்கியங்களோடு இந்தோனேஷியன் மொழியில் உரையாடினார். அமெரிக்க அதிபர்களிலியே பன்மொழிப்புலமை வாய்ந்த தலைவராக தாமஸ் ஜெஃபர்ஸன் (அமெரிக்காவின் மூன்றாவது அதிபர்; 1743–1826) திகழ்கிறார். அவருக்கு ஆங்கிலம் தவிர்த்து கிரேக்கம், லத்தின், பிரெஞ்சு, ஸ்பானிஸ், இத்தாலியன் ஆகிய ஐந்து மொழிகளில் எழுதவும் பேசவும் தெரியும். 



 
சீ சின்பிங் (习近平), சீன அதிபர்: சீ சின்பிங்  சீன மொழியில் சிறப்பாகப் பேசுவார். ஆங்கில மொழியைப் பயன்படுத்துவது மிகவும் குறைவு. உலகத் தலைவர்களுடன் உரையாடும் போதும் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் சீன மொழியில் பேசுவார். சில நேரங்களில் மிகச்சுருக்கமான உரையாடல்கள் ஆங்கிலத்திலும் நிகழ்த்துவதுண்டு.  2013 இல் அமெரிக்க அதிபர் ஓபாமாவுடனான சந்திப்பில் தனிப்பட்ட சில உரையாடல்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். சீனத்தில் 1980 க்குபின் ஆங்கிலம் கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்தாலும் சீனமொழியின் முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் ஆங்கிலத்துக்கு நிகராக வளர்த்துக்கொண்டிருப்பது தான் சீனாவின் சிறப்பு. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சீ சின்பிங்.  

 
ஷின்சோ அபே (安倍 晋三) ஜப்பான் பிரதமர்: சீனாவைப்போன்று தாய்மொழியின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்பதில் ஜப்பானும் முன்னணியில் இருக்கிறது. ஷின் அபே ஜப்பான், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தாலும் ஜப்பான் மொழியில் பேசுவதையே உயர்வாகக் கருதுகிறார். மக்களுடனும் தலைவரிகளுடனுமான உரையாடலை பெரும்பாலும் ஜப்பான் மொழியிலேயே நிகழ்த்துகிறார். சீனாவின் சீ சின்பிங், துருக்கியின் தயிப் எர்டோகன், இந்தியாவின் நரேந்திர மோடி போன்ற தலைவர்களைப் போன்று ஆங்கிலத்தில் பேசுவதை முற்றிலுமாகத் தவிர்த்து தன் தாய் மொழியை முழுமையாகப் பயன்படுத்துவதில் முன்னனியில் நிற்பவர் ஷின்சோ அபே.    


இது 21-05-2015அன்றைய புதிய தலைமுறை இதழில் வெளியானது.

கருத்துகள் இல்லை: