வியாழன், 12 ஜூன், 2014

பயணக்கட்டுரைகள் (ஜெர்மனி பயணம்)


                               தில்லியிலிருந்து கொள்ன் வரை
                             von Delhi nach Köln / from Delhi to Cologne
  இரவு ஒன்றரை மணிக்கு நண்பர்கள் அனைவரும் கூடி வழியனுப்பினார்கள். அப்பொழுது, தமிழகத்தின் தென்பகுதியில் மார்கழி மாத இரவில் இருக்கும் குளிர், பிரம்மபுத்ரா பகுதியில் (JNU) நிலவியது.அந்த நடுஇரவில்என்னுடன் ஜெர்மனி வரும் இரு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு, இந்திராகாந்தி தேசிய விமான நிலையம் நோக்கிப் பறந்தது எங்கள் கார்(Taxi). பாபா கங்காநாத் சாலையைக் கடந்து இடது பக்கமாக நெல்சன் மண்டேலா சாலையில் போகும் போது,காரின் வேகம் அதிகரித்தது. நாங்கள் புறப்பட்டு வந்த வழிநெடுக நிசப்தமே விழித்திருந்தது. திறந்திருந்த கார் ஜன்னல் வழியே உள்ளே வந்த குளிர் காற்று என் இமைகளைக் குளிர்வித்ததுக் கொண்டிருந்தது. பகலில் ஒரு மணி நேரம் எடுக்கும் தொலைவை அந்த நடு யாமத்தில் அரைமணி நேரத்தில் கடந்தோம்.
 பயணச்சீட்டையும்(Air Ticket) கடவுச்சீட்டையும்(Possport)கையில் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்து, விமானம் ஏறுவதற்கான அனுமதிச்சீட்டைப் (Bording pass) பெறுவதற்காக வரிசையில் நின்றோம்.அப்போது, தலையில் தொப்பி அணிந்த ஒருவர் எங்கள் அருகில் வந்து,நீங்கள் எங்கே போகிறீர்கள்?” (तुम कहाँ जारहे हैं) என்று ஹிந்தியில் கேட்டார்.´செர்மனிக்கு” (செர்மனிக்கா) என்றோம்.“நீங்க அனைவரும் மாணவர்களா?” என்றார். ஆமாம் என்றோம்.எங்கே படிக்கிறீர்கள்” (तुम कहाँ का अध्ययन कर रहे हैं)என்றார்,“ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்என்றோம். “நல்லது...”(अच्छा) என சக நண்பனைப் போல் தோளில் தட்டிக்கொடுத்தார். அவர் விமான நிலைய காவல் துறை அதிகாரி என்பதை சிறிது நேரம் கழித்துத் தான் உணர்ந்தோம்.
டில்லியிலிருந்து கொள்னுக்கு (Köln(German)/Cologne(English)), துபாய்,இஸ்தான்புல், வியன்னா, பாரிஸ் வழியாக விமானங்கள் செல்கின்றன.நேரடியாகச் செல்லும் விமானங்களும் உண்டு.ஐக்கிய அறபு நாடுகள், துருக்கி, ஆஸ்திரியா,பிரான்ஸ் முதலிய நாடுகள் இந்த விமான சேவையினை தங்கள் நாடுகளின் வழியே  இயக்குகின்றன.செர்மனி, டில்லியிலிருந்து செர்மனிக்கு  நேரடியாகச்செல்லும் விமானங்களை இயக்குகின்றது. நாங்கள் இஸ்தான்புல் வழியாகச் செல்லும் Turkish Airlines விமானத்தில் பதிந்திருந்தோம்.
அதிகாலை 4.45 மணிக்கு எங்கள் விமானம் புறப்பட்டது. விமானத்திற்குள் இருந்த தொலைக்காட்சியில் துருக்கி படம் ஓடிக்கொண்டிருந்தது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, விமானம் பறந்து கொண்டிருக்கும் இடத்தைப் பற்றியும்,விமானத்திற்கு வெளியில் நிலவும் வெப்பநிலையின் அளவு குறித்தும் அறிவித்தார்கள்.அந்த அறிவிப்பு இரு மொழிகளில் இருந்தது. முதலில் துருக்கியிலும்,பின்பு ஆங்கிலத்திலும் வந்தது.இஸ்தான்புல் வந்துவிட்டது என்பதை அறிவிப்புகள் பறைசாற்றின. ஆறு மணி நேரம் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் அப்போது தரை இறங்குவதை உணர்ந்தேன்.இஸ்தான்புல்லின் அததூர்க் பன்னாட்டு விமானநிலையத்திற்கு வந்தோம்.அததூர்க் என்பது ஒரு மனிதரின்  பெயர்.அவர் துருக்கி நாட்டின் முதல் குடியரசுத்தலைவராக (1923-1938) இருந்த முஸ்தஃபா கேமல் அததூர்க் (Mustafa Kemal Atatürk) ஆவார். விமானத்தை விட்டு வெளியில் வருகையில் குளிர் அதிகமாக இருந்தது.உடனே என் கையில் தொங்கிய சொட்டரை எடுத்து உடம்பில் அணிந்தேன்.அப்போது, அதன் பையில் இருந்த கைப்பேசி என் விரல்களில் தட்டுப்பட்டதும் அதனை எடுத்து நேரத்தைப் பார்த்தேன் 10:50 am என காட்டியது.அதோடு,“இதனைத் தற்போதைய நேரத்திற்குப் புதுப்பிக்கவா?” என கேட்டது. தற்போதைய நேரமா? அது என்ன? என்னும் ஐயத்துடன் சரி’(ok) எனும் பட்டனை அழுத்தினேன். உடனே 8:20 am என மாறியது. அது அப்போதைய துருக்கி நேரம்.புதிய ஒன்றை கண்டுபிடித்ததைப் போல், “இந்தியாவில் 10:50 மணியாகிவிட்டது.இங்கு இப்பொழுது தான் 8:20 மணியாகிறதுஎன்று வியப்போடு என் நண்பர்களிடம் சொன்ன போது அவர்களும் ஆர்வமாக நேரத்தைப் பார்த்தார்கள்.அததூர்க் விமானநிலையத்தில் கபிலர் (kapilar) என்னும் பெயரில் ஓரு டெர்மிணல் (terminal) இருக்கிறது. அதைப்பார்த்தவுடன் எனக்கு சங்கக்காலக் கவிஞரான கபிலர் தான் சட்டென ஞாபகத்திற்கு வந்தார்.
    துருக்கி நேரப்படி நண்பகல் 12.45 மணிக்கு எங்கள் விமானம், அததூர்க் விமானநிலையத்திலிருந்து ஜெர்மனியின் கொள்ன்/போன் (Köln/Bonn) விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது. 2.30 மணி நேரம் கழித்து விமானம் தரை இறங்கியது. விமானத்திலிருந்து காணும் போது, கொள்ன்/போன் விமான நிலையம் புதுப்பொழிவுடன் இருந்தது.சமீபத்தில் தான் தொடங்கியிருப்பார்களோ என்று எண்ணும் அளவிற்கு புத்தம் புதிதாகவும் அழகாகவும் இருந்தது. ஆனால்,இந்த விமான நிலையம் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 1951 ல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு,அந்த இடம்  இராணுவ பயிற்சிக்களமாக இருந்தது. செர்மனியின் மிகப்பெரிய விமான நிலையங்களின் வரிசையில் இது ஆறாவதாகத் திகழ்கிறது. வழக்கமாக ஒரு நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அந்நாட்டின் விமான நிலையத்தில் இறுதி பரிசோதனை(கடவுச்சீட்டு,உரிய மற்ற ஆவணங்களை சரிபார்த்தல்)நிகழும். அப்பரிசோதனைக்காக  கொள்ன்/போன் விமான நிலையத்திற்குள் (Flughafen Köln/Bonn / Cologne/Bonn Airport) வரிசையில் நின்ற போது,என் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்தேன் 3:30 pm என காட்டியது. அதோடுஇதனைத் தற்போதைய நேரத்திற்குப் புதுப்பிக்கவா?” என மீண்டும் கேட்டது. சரி(ok) எனும் பட்டனை அழுத்தினேன். உடனே 2:30 pm என காட்டியது.அது அப்போதைய ஜெர்மனி நேரம். ஓ... துருக்கியை விட ஜெர்மனி  ஒரு மணி நேரம்  பின்தங்கி வருகின்றதோ என எனக்குள் எண்ணினேன்.
    பரிசோதனையினை முடித்துவிட்டு,எங்கள் பயணச்சுமைகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தோம்.விமான நிலையத்திற்குள்ளும் வெளியிலும் நிழவிய அமைதியைக்   கண்டு, “என்ன இந்தப் பகுதியே வெரிச்சோடிகிடக்கிறதே” என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். கொள்னுக்கு எப்படி போவது என்று விசாரிப்பதற்குக் கூட ஒருவருமில்லை.அந்தளவிற்கு ஆளறவமின்றி  அமைதியாக இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு பன்னாட்டு விமான நிலையம். அங்கிருந்து, பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொள்னுக்குப் போக வேண்டும். அதற்காக,வெளியில் வரிசையாக நின்றிருந்த வாடகை உந்துவண்டிகளில் (Taxi),இடையில் நின்ற ஒன்றை நெருங்கினோம்,நாங்கள் போக வேண்டிய இடத்தைச் சொல்வதற்கு முன் அந்த ஓட்டுனர் எங்கள் பேச்சை இடைமறித்து,“இந்த வரிசையில் முதலாவதாக நிற்கும் வண்டிக்குப்(Taxi) போங்கள்” என்றார்.ஏனென்றால்,நாங்கள் வரிசைப்படிதான் போகவேண்டும் என்றும் கூறினார். இங்கு எல்லோரும் வரிசைமுறையினை பின்பற்றுகிறார்கள்.இந்த  முறையினை செர்மனியின்  பல இடங்களில்  காணலாம். வரிசையில்  முதலில் நின்ற வண்டியின் ஓட்டுனரிடம் சென்று நாங்கள் போகவேண்டிய இடம் பற்றி சொன்ன போது,அவர் அங்கிருந்து கொள்னுக்கு தொடர் வண்டி போக்குவரத்து இருப்பதையும் தொடர்வண்டி நிலையத்திற்கு(Bahnhof (G)/Railway station(E)) போகும் வழியையும் சுட்டிக் காட்டினார்.மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி கூறிவிட்டு தொடர் வண்டி நிலையத்தை நோக்கி இறங்கினோம்.அந்த தொடர் வண்டி  நிலையம் கொள்ன்/போன் விமானநிலையத்தின் அடியிலேயே (பூமிக்குள்) இருக்கிறது.ஸீக்புர்க்கிலிருந்து (Siegburg/Bonn)கொள்னுக்குப் போகும் தொடர் வண்டியில் ஏறினோம்.அங்கிருந்து ஆறாவது நிறுத்தமாக கொள்ன் மைய தொடர்வண்டி நிலையம் (Köln Hauptbahnhof / Cologne Central Station)வந்தது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

                                                         கொள்னர் டோம்
 Kölner Dom / Cologne Cathedral
கொள்ன் மைய தொடர்வண்டி நிலையத்தை விட்டு,தென்மேற்கு வாயில் வழியை வெளியேறும் போது,என் தலை என்னை அறியாமலே வானத்தை நோக்கி அன்னார்ந்தது.சில வினாடிகள் கழித்து,என் பார்வையை வானத்தை நோக்கி இழுத்துச் சென்றது எது என்று நான் உணரும் போது,எனக்கு எதிரில் அந்த இரட்டைக்கோபுரம் நின்றது.அந்தக் கட்டிடத்தின் ஒய்யாரமும் அதன் பாதத்தில் குழுமியிருந்த மக்கள் கூட்டமும் அது என்னவாக இருக்கும் என்ற கேள்வியை மனதில் எழுப்பி,அக்கோபுரத்தை நோக்கி நடக்கத் தூண்டின.ஆனால், பயணக்கலைப்பு இயல்பான மூச்சை பெருமூச்சாக்கிக் கொண்டிருந்தது. அதோடு,நண்பர்களும் முதலில் விடுதிக்குப் போவோம் என்று அழைத்ததால்,அந்தக்கோபுரத்தில் இருந்து மேற்குப்பக்கமாக 250 மீட்டர் தொலைவில் இருக்கும்  Backbackers விடுதிக்குப் போனோம்.அங்கு அறை எண் 8ல் தங்கினோம். அந்த அறையில் எங்களுடன் ஜப்பான்  மாணவர் அகிஹிகொ  (あきひこ / Akihiko) என்பவர் தங்கினார். 21மார்ச் 2011 அன்று ஜப்பானில் நடந்த நிலநடுக்கம் பற்றி அவரிடம் விசாரித்த போது,துயரம் கலந்த சொற்களில் அந்தப் பேரழிவை விவரித்தார்.Backbackers Hostel என்று அந்த விடுதியின் பெயர் எவ்வளவு நயமாக வைத்திருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து வியந்தேன். அதைத் தமிழில் பெயர்த்தோமென்றால், “முதுகில் பயண‌ச்சுமையுடையோர் விடுதி” என்று வரும்.
அந்த இரட்டைக் கோபுரத்தைக் காண  இந்த ஆறு மாதத்தில் ஏறத்தாழ 20 முறை போயிருப்பேன்.ஏனென்றால்,கொள்ன் நகரின் அடையாளச்சின்னமே அந்த இரட்டைக் கோபுரம் தான்.இதனை ஜெர்மனில், கொள்னர் டோம் (Kölner Dom)என்று அழைக்கின்றார்கள். இது கொள்ன் மாவட்டத்தின் தலைமைத் தேவாலயமாக ஆரம்ப காலத்திலிருந்து விளங்குகின்றது.வார விடுமுறை நாட்களில் (சனி,ஞாயிறு) இப்பகுதி திருவிழா போல் காட்சியளிக்கும்.ஒரே நிற ஆடையணிந்த ஆண்களும் பெண்களும் பல்வேறு குழுக்களாக நடனமாடுவார்கள்.டோமைச் சுற்றி தனியாகவும் குழுவாகவும் சில இசைக்கலைஞர்கள் ஆங்காங்கே இசைமீட்டிக்கொண்டிருப்பார்கள். டோமை சுற்றிப்பார்க்க வரும் பல தரப்பினரும் தன்னை மறந்து,இந்த இசைக் கலைஞர்களின் இசைக்கேற்ப சிறிது நேரம் நடனமாடுவார்கள்.விடுமுறை நாட்களில் குறிப்பாக,மாலை 5 மணியிலிருந்து 10 மணிவரை அப்பகுதி மிகவும் கலகலப்பாக இருக்கும். வேலை நாட்களிலும் (திங்கள் - வெள்ளி) அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.கொள்ன் நகருக்குப் புதிதாக வருபவர்கள் அந்தக் கோபுரத்தைச் சுற்றிச்சுற்றிப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள்.  
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

கருத்துகள் இல்லை: