சனி, 6 ஜூன், 2015

வட்டார வழக்கு: அட்டணக்கால்



ஒரு காலை 'ட' போல் மடித்து மறுகாலின் முட்டியில் தாங்குமாறு வைத்து அமரும் நிலையை 'அட்டணக்கால்' என்கிறோம். கரிசல் வட்டாரத்தில், 'அட்ணங்கால்', 'ரெட்ணங்கால்', 'அட்டளங்கால்' என்றும், நாஞ்சில் வட்டாரத்தில் 'நட்டணக்கால்'  என்றும் இதற்கு பல பெயர்கள் உண்டு. 'அட்டணக்காலை' 'சம்மணம்' (சப்பணம்) போன்று ஓர் அமரும்(உட்காரும்) நிலையாக மட்டும் நாம் பார்ப்பதில்லை. நம் சமூகத்தில், சில சூழல்களில் ஒருவரின் மதிப்பு, கௌரவம், பணபலம், அதிகாரம், செருக்கு, கம்பீரம் முதலியவற்றின் அடையாளமாகவும் 'அட்டணக்கால்' இருந்திருக்கிறது. ஊர்க்கூட்டங்களில் தலைவர்களும், நாட்டாண்மைகளும் 'அட்டணக்கால்' போட்டுத்தான் அமர்ந்திருப்பார்கள். ஜெயமோகன் எழுதிய 'நிலம்' என்னும் சிறுகதையில், 'அட்டணக்கால்' கௌரவத்தின் அடையாளமாக பின்வருமாறு வரும். ‘காட்டுவேலை ஏன் செய்றே? நீ மகாராணியாக்கும்…நாக்காலியிலே அட்டணக்கால் போட்டுட்டு ஒக்காரு…’ அவள் சிரித்து ‘ஆமா…அட்டணக்கால் போடுறாங்க… மானம்பாத்த பூமியிலே அது ஒண்ணுதான் கொற’ ஏன் போட்டா என்ன? நீ யாரு? நீ வடக்கூரான் பெஞ்சாதி…கோயில்பட்டி சங்‌ஷனிலே போயி பேரச்சொல்லிப்பாரு.தெருவே எந்திரிச்சு நிக்கலேண்ண என்னாண்ணு கேளு…’
ஒரு செயல் முரண்பட்ட இரு பொருளை ஒருங்கே உணர்த்துவது அபூர்வம். அவ்வகையில் அட்டணக்கால் ஓர் அபூர்வமான சொல். அட்டணக்கால் போட்டு அமர்வது மதிப்பு, அதிகாரம், செருக்கு முதலியவற்றின் அடையாளமாகத் திகழும் அதே சமூகத்தில், மரியாதைக் குறைவின் அடையாளமாகவும் விளங்குகிறது. வயது, பணம், பதவி முதலியவற்றில் உயர்ந்தவர்கள், அவற்றில் தாழ்ந்தவர்கள் முன்பு 'அட்டணக்கால்'போட்டு அமர்வதை மதிப்பாகவும், செருக்காகவும் கருதுகின்றனர். அதேவேளையில், அவற்றில் தாழ்ந்தவர், உயர்ந்தவர் முன்பு அட்டணக்கால் போட்டு அமர்வது, உயர்ந்தவர்களுக்கு மரியாதைக்குறைவை ஏற்படுத்துவதாக பொருள் கொள்ளப்படுகின்றது. ஒரு பண்பாட்டில் ஒரு செயல் இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டு வரும் சூழலில், அப்பண்பாடு உலகமயமாக்கம், முற்போக்கு சிந்தைனை உள்வாங்கல் போன்றவற்றிற்கு ஆட்படும்போது அவ்விரு பொருள்களும் கேள்விக்குள்ளாகின்றன. முதலில் கேள்விக்குள்ளாவது மரியாதைக்குறைவு என்னும் பொருள் தான்.      
சிறுவர்கள் தரையில் 'அட்டணக்கால்' போட்டு வரிசையாக உட்கார்ந்திருக்க, ஒவ்வொரு காலாக எண்ணி "அட்டணக்கா புட்டணக்கா அடுக்கி வச்ச மாதுளங்கா…" (சிறுவர் கிராமியப்பாடல்) எனப் பாடிக்கொண்டே ஆட்டத்துக்கு ஆள் பிரிக்கும் ஒரு சிறுவர் விளையாட்டை கி.ராஜநாராயணன் குறிப்பிடுகிறார். 'அட்ணங்கால்', 'ரெட்ணங்கால்', 'அட்டளங்கால்' 'நட்டணக்கால்' என்று வட்டாரவழக்கிலும் 'அட்டணக்கால்'என்று பொது வழக்கிலும் வழங்கப்படும் இச்சொல் இன்று அருவழக்காகிவிட்டது. இன்றைய தலைமுறை இதனை 'கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கான்' என்கின்றது.    

இதன் சுருக்கிய வடிவம் தி இந்து தமிழ் நாளிதழின் "அறிவோம் நம் மொழியை" பகுதியில் 15-05-2015 இல் வெளியானது.

1 கருத்து:

Dr. Madhesh E சொன்னது…

அருமையான பதிவு, நன்றி தோழரே, எனக்கு கால் மேல கால் போட்டு உட்காருதல் என்கிற வலக்கம் தான் தெரியும் அதற்க்கு அட்டணக்கால் என்கிற பெயரும் வளங்கி வருகிறது என்பது இன்று தான் அதுவும் இங்கு படித்துதான் தெரிந்து கொண்டேன்.