ஞாயிறு, 28 ஜூன், 2020

பெயரில் என்ன இருக்கிறது?



நாம் சாதாரணமாகச் சொல்வோம், பெயரில் என்ன இருக்கிறது?. ஆனால்  நம்முடைய பெயரிலிருந்து நாம் வசிக்கும் வீட்டின் பெயர் வரை, நமது சித்தாந்தத்தோடு நம்மை அடையாளப்படுத்தும் ஒன்றாக பெயர் விளங்குகிறது. “எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே” - என்று தொல்காப்பியர் கூறுவது போல நாம் சூட்டும் எல்லாப் பெயர்களும் அடிப்படையில் ஒரு குறியீடாக விளங்குகின்றன. பெயர்களில் உள்ள அந்தக்குறியீடுகள் தான் பெயர்சொல்லி அழைக்கும் அனைத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் இனம்காட்டுகின்றன. மனிதனின் புழக்கத்தில் உள்ள அனைத்தின் பெயரிலும் காலங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வருபவை அவனுடைய சித்தாந்தமே. அச்சித்தாந்தம் மதம், சாதி போன்ற இன்னும் பல காரணிகள் வழிப்பட்டதாக இருக்கின்றன. குறிப்பாக, இந்தியா போன்ற பழம்பெரும் நாட்டில் வசிக்கும் மக்களிடம் காலங்காலமாக வழங்கிவந்த இதிகாசங்களும் புராணங்களும் பெயர்சூட்டலில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கின்றன.
பௌத்தம், சமணம், இந்து, சீக்கியம், கிறிஸ்தவம், இஸ்லாம் முதலிய மார்க்க மரபில் தோன்றிய பெயர்கள் தான் இந்தியாவின் கோலோச்சுகின்றன. மனிதனின் பெயரையும் மனிதன் பிறவற்றிற்குச் சூட்டும் பெயரையும் அவன் பின்பற்றும் மார்க்கத்தில் தோன்றிய புனித நூல்களும், இதிகாசங்களும், புராணங்களுமே தீர்மானிக்கின்றன.இந்தப் பின்னணியிலிருந்து நாம் சிந்தித்துப்பார்த்தால் பெயர்சூட்டலில் உள்ள தற்சார்பை விளங்கிக்கொள்ள முடியும். எந்த ஒரு பெயரும் தற்சார்பற்றதல்ல. இன்றும் நம் வழக்கில் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் ஒரு வரலாற்றுத்தொடர்பு உண்டு. கௌதம், ராமன், பகத்சிங், ஆபிரஹாம், முஹம்மது ஜுபைர் போன்ற பெயர்களில் உள்ள மார்க்க ரீதியான வரலாற்று உறவு மிக நீண்டது. அதோடு மார்க்க வரலாற்றில் ஊர்ப்பெயர்களாகவும் அஃறிணைப்பெயர்களாகவும், கடவுளின் பெயர்களாகவும் உள்ளவை நம் சமூகத்தில் மனிதனின் பெயர்களாக உருவெடுத்தன.
இப்போது ஏதோ ஒலிமயக்கத்திற்கு ஆட்பட்ட சமூகம் போல் பிறமொழிப் பெயர்களின் மீது கண்மூடித்தனமான ஈர்ப்போடு இயங்குகிறது. குறிப்பாக சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டுவது அதிகரித்திருக்கிறது. இன்று பாட்டியின் பெயர் வெள்ளையம்மாள், கருப்பாயி என்றும் பேத்தியின் பெயர் முறையே ஸ்வேதா, சியாமளா என்றும் இருப்பதை கவனித்தால் புரியும். மேற்கண்ட தமிழ்-சமஸ்கிருதப் பெயர்களை ஒப்புநோக்கினால் சமஸ்கிருத மொழிப்பெயரில், அதாவது சமஸ்கிருத ஒலியில் மயங்கிக்கிடக்கும் தமிழ்ச்சமூகத்தை அறியலாம்.
நம் பெயர்களின் அடிப்படையில் கூட ஜாதியை, மதத்தை அடையாளம் காண முடிந்த நிலை கடந்த நூற்றாண்டு வரை இருந்தது. பெரியாரின் சமூகசீர்திருத்தங்களால் தமிழகத்தில் சாதிப்பெயரை பெயரின் பின்னொட்டாகப் போடும் முறை ஒழிக்கப்பட்டது. வட இந்தியாவில் இன்றும் அரசியல் தலைவர்களின் பெயரிலும், அரசு நிர்வாகிகளின் பெயரிலும் சாதியின் பெயர் (முகர்ஜி,அகர்வால், படேல்,பட்நாய்க்,பாண்டே,ஜோசி) பின்னொட்டாகத் தொடர்கிறது. பின்னொட்டாக விளங்கும் அந்த சாதிப்பெயர்கள் இந்தியர்களின் நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பில் நிகழ்த்தும் பாகுபாடும், வன்முறையும் கொடூரமானவை. 
நம்முடைய அடையாளத்தில் உள்ள தீவிரத்தன்மையை நமது பெயர்களில் காணலாம். சாதி, மதம் சார்ந்த அடையாளங்களை மீண்டும் உயிர்பித்துக் கொண்டிருப்பதில் பெயர் சூட்டலின் பங்கும் முக்கியமானது. அதானால் தான் இன்றும் பொது இடங்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் மதம், சாதி அடையாளங்களை பெயர்களாகச் சூட்டிக் கொண்டிருக்கிறோம்.  சங்க இலக்கியப் புலவர்கள், அரசர்களின் பெயரைப் பாருங்கள். அவர்கள் தன் ஊர், தொழில் போன்ற பல இயற்கைச்சூழல்களை பெயர்களாகச் சூட்டியிருக்கிறார்கள். அவர்களின் பெயரில் இன்றுபோல் சாதி, மத அடையாளங்கள் இல்லை. அப்படியென்றால் இடைப்பட்டக் காலத்தில் தான், குறிப்பாக இதிகாசங்களும், புராணங்களும் செல்வாக்குப்பெற்றிருந்த காலத்தில் தான் நாமும் வரலாற்று நாயகர்களாக(!) மாறும் நோக்கில் இதிகாச, புராணப்பெயர்களை சூட்டத்தொடங்கியிருக்கிறோம். இதன் பின்னணியில் மதங்கள் நின்றன. இன்று ஏன் இந்த பூமியில் உள்ள இயற்கையான பலவற்றின் பெயரை நம் பெயராக சூட்டுவதில்லை? 2011-இல் ஜெர்மனியின் கொள்ன் பல்கலைக்கழகத்தில் இருந்த போது அங்கு தமிழ் ஆய்வு செய்த ஒரு ஜெர்மன் மாணவி தன் மகளுக்கு ‘நீலம்’ என்று தமிழில் பெயர் சூட்டியிருந்தார். ‘நீலம்’ என்றால்… என்று நான் வினவிய போது, ‘நீலநிறம்’ தான் என்றார். நீலகண்டன் என்ற பெயர் தமிழர்களின் பெயர் மரபில் உண்டு. ஏனென்றால் அது மதம் சார்ந்த ஒன்று. ஆனால் ‘நீலம்’? இந்தியச்சூழலிலிருந்து அதை ஏற்றுக்கொள்ள தயங்குவோம். நிறத்தைப் போயி பெயராகச்சூட்டுவதா? என்று. ஆனால் அது இடுகுறிபெயரமைப்பில் பகுதியாக தமிழ் மரபில் இடம்பெற்றிருக்கிறது, கருப்பசாமி, வெள்ளையம்மாள் என்று. இப்பெயர்களுக்குப் பின்னணியிலும் கடவுள் கருத்தாக்கம் உண்டு. ஆனால் அது சிறுதெய்வ வழிப்பட்ட பெயர் முதன்மையால் வந்தது. அதாவது கருப்பசாமி என்று ஒரு வீரன் குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்து வீரமரணம் அடைந்திருப்பான். அவனை அவனது வம்சாவழியினர் சிறுதெய்வமாக வணங்கி வந்திருப்பர். அவன் பெயரை அடுத்தடுத்த தலைமுறைக்கு சூட்டி வந்திருப்பர். அதனால், கருப்பு, வெள்ளை, சிவப்பு, நீலம் என்று நிறத்தை மட்டும் குறிக்கும் பெயரைச் சூட்டும் மரபு இங்கில்லை. அதற்கு அடிப்படை சாதி, மதக் கண்ணோட்டங்களிலிருந்து மீளமுடியாமையே. அதை விட முக்கியமானது பெயருக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் உள்ள ஆழமான தொடர்பு.
திராவிட மொழியியல் அறிஞரான கால்டுவெல் அயர்லாந்தில் பிறந்தவர். கால்டுவெல் போன்று அவர் காலத்திலும் அவருக்குப்பின்னும் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பிய மிஷனரிகள் பெரும்பாலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களிலேயே தங்க விரும்பினர். ஆனால் கால்டுவெல் வெப்பம் மிகுந்த திருநெல்வேலி மாவட்டத்தின் இடையான்குடியில் இருந்துகொண்டே நாற்பதாண்டு காலம் பணியாற்றினார். அதற்கு அடிப்படையாக இருந்தது ஊரின் பெயர். அயர்லாந்தில் அவர் பிறந்த ஊர் ‘ஷிப்பர்யார்ட்’ (shipperyord), அதே பொருளைக் கொண்ட ‘இடையான்குடி’ என்னும் தமிழ்ப்பெயர் (ஊர்பெயர்) அவரைப் பெரிதும் கவர்ந்தது. தான் பிறந்த ஊரிலேயே வசிப்பதாக உணர்ந்ததால் தான் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அங்கேயே நிலைகொண்டார்.
மனிதர்களின் எண்ணங்கள் தான் பெயருக்கு அடிப்படை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இறப்பு என்னும் பொருளில் தமிழ்ச்சமூகம் பயன்படுத்தும் பல்வேறு வகையான வழக்குச்சொற்கள்.
இறப்பின் மறுபெயர்கள்
1.   அவுட்டாயிட்டார் (ஆங்கிலம்-தமிழ் கலப்பு வழக்கு)
2.   இயற்கை எய்தினார் (தூய தமிழ் வழக்கு)
3.   இளைப்பாருகிறார் (கிறிஸ்தவ வழக்கு)
4.   இறைவனடி சேர்ந்தார் (இந்து வழக்கு)
5.   உயிர் நீத்தார் (சமண வழக்கு)
6.   எமலோகம் சென்றார் (இந்து வழக்கு)
7.   கட்டையில போயிட்டார் (நாஞ்சில் வழக்கு­­)
8.   கண் மூடினார் (பொது வழக்கு)
9.   காலமானார் (பொது வழக்கு)
10.  கைலாசம் போயிட்டார் (இந்து வழக்கு)
11.  சிவலோகப் பதவி அடைந்தார் (சைவ வழக்கு)
12.  சீவிச்சிருச்சு (கரிசல் வழக்கு)
13.  செத்தார் (இழிவழக்கு)
14.  செல்லாயிட்டார் (கரிசல் வழக்கு)
15.  சொர்க்கலோகம் போயிட்டார் (கிறிஸ்தவ வழக்கு)
16.  சோலி முடிஞ்சு (கரிசல் வழக்கு)
17. டெத்தாயிட்டார் (ஆங்கிலம்-தமிழ் கலப்பு வழக்கு – சென்னை/நகர வழக்கு)
18.  தவறிவிட்டார் (பொது வழக்கு)
19.  துஞ்சினார் (பொது வழக்கு)
20.  நித்திரை அடைந்தார் (கிறிஸ்தவ வழக்கு)
21.  புட்டுக்கிட்டான் (சென்னை வட்டார வழக்கு)
22.  போயிட்டார் (பொது வழக்கு)
23.  மகிமைக்குள் பிரவேசித்தார் (கிறிஸ்தவம்)
24.  மடிஞ்சிட்டான் (பொது)
25.  மண்டையைப் போட்டார் (பொது)
26.  மரணம் அடைந்தார் (பொது)
27.  மவுத்தாயிட்டார் (இஸ்லாமிய வழக்கு)
28.  மறைந்தார் (பொது)
29.  மாண்டார் (பொது)
30.  மாய்ஞ்சிட்டார் (வட்டாரவழக்கு)
31.  மேலே போய்ட்டார் (கிறிஸ்தவம்)
32.  மேலோகம் போயிட்டார் (கிறிஸ்தவம்)
33.  வைகுண்டப் பதவி அடைந்தார் (வைணவம்)
ஏன் ஒரு சமூகம் ஒரு நிகழ்வைக் குறிக்க இத்தனை பெயர்களைப் பயன்படுத்த வேண்டும்? ஒவ்வொரு குழுவும் தற்சார்பை மொழியில் அடையாளப்படுத்த முயல்கிறது. ஒரு சமூகத்தில் மதம், கொள்கை, சாதி போன்ற பலவற்றால் வேறுபட்டிருக்கும் ஒவ்வொரு குழுவும் தன் அடையாளத்தை மொழியின் வழி நிறுவுகிறது. அனைத்து அடையாளங்களையும் ஏற்றுக்கொள்ளும் அந்த மொழி தான் அச்சமூகத்தின் பன்மைத்துவத்தை இனம் காட்டுகிறது. 
வரலாற்றுக் காரணங்களோடு சூட்டப்படும் மனிதனின் பெயர்கள் உண்மையில் அவரவர்க்கு பிடித்ததாகவும் பெருமையுடையதாகவும் எண்ணுகிறோம். பிறர் நம்மை நம் பெயரில் அழைக்கையிலும் மகிழ்கிறோம். அவ்வளவு சிறப்பு வாய்ந்த பெயரை வாய்விட்டு அழைக்க சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு குழுவிற்கு உரிமை மறுக்கப்படுகிறது. அதாவது கணவன் பெயரை மனைவி உச்சரிக்கக் கூடாது என்னும் பழம்மரபு/கொடுமரபு. கணவனை பெயர் சொல்லி அழைப்பது குற்றம், பிறரிடம் பேசும்போது கூட கணவனின் பெயரைச் சொல்லுவது குற்றம், வயதில் பெரியவரை பெயர் சொல்லி அழைப்பது குற்றம் முதலியவற்றை மரபாகப் பின்பற்றும் சமூகத்தில் தான், பெயரில் என்ன இருக்கிறது? என்னும் வழக்கும் இருக்கிறது. மரபும், வழக்காறும் சூழலால் பிண்ணப்படுகின்றன.


கருத்துகள் இல்லை: