ஞாயிறு, 28 ஜூன், 2020

பொருள் திரியும் சொற்கள்



     “யோவ்… என்னய்யா பஸ்ஸ இப்படி உருட்டிக்கொண்டு போறீங்க? எல்.எஸ்.எஸ்ல ஏறினால் சீக்கிறம் போயிறலாம்னு ஏறினேன், இது சாதாரண உள்ளூர் பேருந்து போலத்தான் போகுது” என மனதிற்குள் நொந்துகொள்ளும் நிலை இன்று இயல்பாகிவிட்டது. பேருந்துகளின் முன் கண்ணாடியில் எல்.எஸ்.எஸ்., சூப்பர் ஃபாஸ்ட், ஃபாஸ்ட் பாஸஞ்சர், பாய்ண்ட் டூ பாய்ண்ட், எண்ட் டூ எண்ட் என வேகத்தைக் குறிக்கும் இன்னும் ஏராளமான சொற்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் பயணக்கட்டணத்தைக் கூட்டி வசூலிப்பதற்கான உத்திகளே தவிர அர்த்தம் பொதிந்த சொற்கள் அல்ல. இந்த நிலை பேருந்தில் மட்டுமல்ல நம் வாழ்வின் எல்லாச்சூழலோடும் இணைந்து கிடக்கின்றது. ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு ஒரு மணி நேரம் காத்திருக்கவைப்பது, இப்போ (இதோ) வந்துடுறேன்னு சொல்லிட்டு எப்பொழுதோ போவது, நாளைக்கே வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு நான்கு நாள் கழித்து கொடுப்பது என இவ்வகைச் சொல் புழக்கத்தின் பரப்பு விரிவானது.
தன் மெய்ப்பொருளிலிருந்து திரிந்து தன் தொடர்புடைய பிறிதொரு பொருள் தரும் சொற்களின் எண்ணிக்கை சமகாலத்தில் பெருகிவிட்டது. சொற்களின் திரிந்த பொருளை சமூகம் இயல்பாக ஏற்றுக்கொள்கின்றது. ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, இன்னொருவர் வந்தால், அவரிடம் ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்கன்னு சொல்வது யதார்த்தம். ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க என்று சொன்னவரிடம் ஒரு நிமிஷம் கழித்து, ஒரு நிமிஷம் ஆயிடுச்சு என்று யாரும் கேட்பதில்லை. அந்தக் காத்திருப்பு பல நிமிஷங்கள் வரை நீளலாம். ஆனால் இன்று ஒரு நிமிஷம் என்னும் சொல், சொன்னவர் திரும்ப அழைக்கும் வரையான காலத்திற்கும்(பல நிமிஷம்) பொருந்தும் சொல்லாக பொருள் திரிகின்றது. 
உடனே, கொஞ்நேரம் போன்ற சொற்களும் இவ்வகைத்தே. இப்போ என்ற அப்பொழுதே,கொஞ்ச நேரம் என்ற அந்த நேரத்திலே, உடனே என்ற உடனே வினையாற்றும் போது அச்சொற்கள் தன் மெய்ப்பொருளில் இயங்குகின்றன. அவ்வாறன்றி காலம் தாழ்த்தும்போது அவை இயல்பாகவே பொருள் திரிகின்றன. ஒரு சமூகத்தின் கலாச்சாரமும், பண்பாடும் மொழியோடு இணையும் இடம் இது. பண்பாட்டின் அழுத்ததிற்கு நெகிழ்ந்து கொடுப்பதும், ஏற்றுக்கொள்வதும் மொழியின் இயல்பு. மொழியிலின் ஒரு பிரிவான சமூக மொழியியல் (Sociolinguistics), ஒரு சமூகத்திற்கும் அச்சமுகம் பேசும் மொழிக்கும் உள்ள இவ்வகை உறவுகள் பற்றி ஆராய்கிறது.   
திரிபு சொல்லில் மட்டும் நிகழ்வதில்லை. மரம்+கள்= மரங்கள். ம், ங்காக திரிவது ஒலித்திரிபு. மதுரையை ʻமருதைʼ என்பது (பேச்சு வழக்கில்) சொல் திரிபு. இப்ப வந்துட்டேன்னு சொல்லிட்டு எப்பவோ வருவதை பொருள் திரிபு என்று சொல்லலாமா?! அல்லது மனிதனின் மனத்திரிபா?!    

கருத்துகள் இல்லை: