வியாழன், 12 ஜூன், 2014

ஹைக்கூ

கோயிலுக்குள் கால் வைத்தால்
கையேந்தும் உண்டியல்
யாருக்கு வறுமை?

சட்டத்தின் முன் அனைவரும் சமம்
சிறைச்சாலையில்...
முதல் வகுப்பு இரண்டம் வகுப்பு.

விலையில் நியாயம்
அளவில் கொள்ளை
ஓ...நியாய விலைக்கடையோ!

அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில்
பாடப்புத்தகம் பேசுகிறது
சாதிகள் இல்லையடிப் பாப்பா...

இடுகாட்டிலும் செத்துவிட்டது சமத்துவம்
அதோ. . .
ஒன்றிரண்டு பளிங்குக்கல்லறை.

செழிப்பில் விமானம்
வறுமையில் மாட்டுவண்டி
என் நாட்காட்டியின் பயணம்.

அச்சடித்த அழைப்பிதழ்
அனைவருக்கும் இல்லை
ஒரு கிராமம் நகரமாகின்றது.

வேலன் எய்த அம்பில்
விதவையானது
புறா.

வளரும் மருதாணி நகத்தில்
தேங்கிக் கிடக்கின்றது
தேய்பிறை.

மல்லிகைக்கடைக்காரே
மருத்துவராகவும் இருக்கிறார்
என் ஊரில்.

2600 கீ.மீ. இடைவெளியில் நாம்
தொலைப்பேசியில் கழிகிறது
உன்னுடனான வாழ்க்கை.

ஓட்டைச்சட்டி பானைகள்
ஒட்டுப்போட்டுக்கொள்கின்றன
ரோடுபோடும் காலம்.

கருத்துகள் இல்லை: